\
Netanyahu &  Eyal Zamir
Netanyahu & Eyal Zamir reuters

தேர்தலா? ஈரான் போரா? நெதன்யாகு – ராணுவத் தலைவர் இடையே மோதல் தீவிரம்!

இஸ்ரேல் தேர்தலுக்கு முன் ஈரான் விவகாரம்: நெதன்யாகு-ராணுவத் தலைவர் மோதல் தீவிரம்
Published on: 
Summary

இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவத் தலைவர் ஜாமிர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

இஸ்ரேலில் அக்டோபர் 27 அன்று தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், ராணுவத் தலைவர் இயால் ஜாமிருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, நெதன்யாகு முன்மொழிந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவ தலைவர் ஜாமிர் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் நெதன்யாகு கையெழுத்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Benjamin Netanyahu
Benjamin NetanyahuReuters

இந்த விவகாரம் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்ததாகவும், ஈரான் உடனான மோதல் அதிகரித்தால் அது தவறான கணிப்புகளுக்கும், பெரிய அளவிலான பதற்றத்திற்கும் வழிவகுக்கலாம் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஈரான் விவகாரத்தைத் தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்த முயற்சி நடக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்துள்ளார். சேனல் 14 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ராணுவத் தலைவருடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்து, அது அடிப்படை ஆதாரமற்ற தகவல் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஈரானில் ஆட்சியைக் கவிழ்க்க இஸ்ரேல் ராணுவத்துக்கும் மொசாட் உளவு அமைப்புக்கும் சமீபத்தில் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் கருத்துக்கும் தற்போது வெளியாகியுள்ள ராணுவ நடவடிக்கை குறித்த தகவலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகவில்லை.

Netanyahu in Israel Parliament
Netanyahu in Israel Parliament Reuters

எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் நெதன்யாகுவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட், தேர்தலை ஒத்திவைப்பதற்காக ஈரானுடன் மோதலை அதிகரிக்க நெதன்யாகு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டும், நாட்டின் பாதுகாப்பை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் நெதன்யாகு செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரம் இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Netanyahu &  Eyal Zamir
தெருவில் தொடங்கிய போராட்டம்.. புரட்சி செய்து ஆட்சியை பிடித்த மாணவர்கள்! கொண்டாடும் மக்கள்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com