சிறையில் உள்ள ஹமாஸ் தலைவர் யார்? அவருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்? என்பது குறித்துப் பார்க்கலாம்.
இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேமில், பேருந்துகளைக் குறிவைத்து கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹமாஸ் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹசன் சலாமே (Hassan Salameh), கடந்த 1996ஆம் ஆண்டு ஜெருசலேமில் நடைபெற்ற பேருந்து குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பானவர் என இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
தற்போது, சலாமே அந்நாட்டு சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவ நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் பாலஸ்தீனியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை இஸ்ரேல் நீதிமன்றம் நிறைவேற்றியது.
இந்தச்சூழலில் தான், ஹமாஸ் மூத்தத் தலைவர் ஹசன் சலாமேவை, தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் நேரில் சந்தித்துள்ளார். அப்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் சூழ, சலாமேவிடம் பேசிய பென்-க்விர், சிறையில் அவருக்கு வழங்கப்பட்டு வரும் கடுமையான நிலைமைகள் தான் அமல்படுத்தியவை என்று கூறியதுடன், “நான் உன்னை கொல்ல விரும்புகிறேன்... உன்னை தூக்கிலிட விரும்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பான, காணொளி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த சந்திப்பு தனக்கு ஒரு வகையான நிறைவை அளிப்பதாகவும், 1996ஆம் ஆண்டு ஜெருசலேம் பேருந்து குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இளைஞராக இருந்தபோது தான் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இவர் மட்டுமின்றி இஸ்ரேல் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற பாலஸ்தீனிய கைதிகளுக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.