அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், 5-வது நாளாக தொடர்ந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகின்றன.
இந்த நிலையில் தற்போது, ஈரானின் உச்சத்தலைவராக அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா காமேனி (56) ஈரானின் உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் 88 மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே நியமனம் செய்யவிருப்பதால், அவர்கள் மொஜ்தபா காமேனி பெயரை முன்மொழிந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகவில்லை.
இந்த சூழலில், அயதுல்லா காமேனி கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அவரது பதவிக்கு வரும் எவரையும் இஸ்ரேல் ராணுவம் கொல்ல முயலும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடரவும், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் வகையில் ஈரான் பயங்கரவாத அரசால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் இஸ்ரேலின் நேரடி இலக்காக இருப்பார் எனவும் அவர் யாராக இருந்தாலும் அவர் எங்கு ஒளிந்திருந்தாலும் அது முக்கியமல்ல. ஈரானின் பலத்தை அழிக்கவும், அங்குள்ள மக்கள் அந்த அரசாங்கத்தைத் கவிழ்ப்பதற்கான சூழலை உருவாக்கவும், இஸ்ரேல் தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.