ஈரான் | அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பு.. புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா.?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், 5-வது நாளாக தொடர்ந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகின்றன.
இதற்கிடையில், ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு, பின்னர் ஈரானின் அதிஉயர் தலைவராக யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இந்த சூழலில் , அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், புதிய உச்சத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் தற்போது, ஈரானின் உச்சத்தலைவராக அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (56) ஈரானின் உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் 88 மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே நியமனம் செய்யவிருப்பதால், அவர்கள் மொஜ்தபா காமேனி பெயரை முன்மொழிந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகவில்லை.

