மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேலிய வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலாக, ஹெப்ரான் நகரை முற்றுகையிட்டு, பல வீடுகளை இடித்து, நகரத்தை தரைமட்டமாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பாலஸ்தீன மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்கள் அதிகளவில் வசிக்கும் இடமாக மேற்குக்கரை (West Bank) பகுதி அமைந்துள்ளது. 1967-ம் ஆண்டு நடந்த 6 நாள் போருக்கு பின்னர் இந்த பகுதி ஜோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து இஸ்ரேலிய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போதில் இருந்து அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது குடியேற்றங்களை அதிகரித்து வருவதாக தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் மிகப்பெரிய சுவர்களை (west bank wall) எழுப்பி அந்த பிராந்தியத்தையே பல பகுதியாக பிரித்து வைத்துள்ளது. மேலும் அந்த பகுதிகளை கடக்க சோதனை சாவடிகளையும் அமைத்து பாலஸ்தீனர்களை கண்காணித்து வருகிறது. அதோடு தீவிரவாதிகள் என ஏராளமான பாலஸ்தீனர்களின் வீடுகளையும் இஸ்ரேல் அவ்வப்போது சோதனை நடத்தி வந்தது.
இந்த சூழலில், இரு நாட்களுக்கு முன்னர் அந்த சோதனை சாவடி அருகே காரில் வந்த இரண்டு பேர் அங்கு பாதுகாப்பில் இருந்த இஸ்ரேல் வீரர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு அங்கு பணியில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் துப்பாக்கியால் சுட அந்த பகுதியே போர் களமாகியுள்ளது. .
இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் இரு பாலஸ்தீனர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் தாக்குதலில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு, 3 இஸ்ரேலிய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதியில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார்.
தாக்குதல் நடத்திய இரண்டு பாலஸ்தீனர்களும் ஹெப்ரான் (Hebron ) நகரில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பகுதியை இஸ்ரேலிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. சோதனை என்ற பெயரில் ஹெப்ரான் நகரில் நூற்றுக்கணக்கானோரின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரையே தரைமட்டமாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.