ஹவுதி அமைப்பை தீர்த்துக்கட்ட முடிவு : ஒன்று சேர்ந்த சர்வதேச நாடுகள்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சவூதி!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2014-2015 காலகட்டத்தில் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய ஹவுதி அமைப்பு ஏமனின் தலைநகரான சனா (Sanaa) உள்ளிட்ட பெரும்பாலான வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஹவுதி அமைப்பிற்கு ஈரான் அரசு நிதி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2015-இல் ஏமன் அரசுக்கு ஆதரவாகச் சவூதி அரேபியா தலைமையான கூட்டுப் படைகள் களமிறங்கின. எனினும் ஹவுதிகளின் எழுச்சியை இந்தக் கூட்டுப் படைகளால் தடுக்க முடியவில்லை.
இந்தச் சூழலில் சமீபத்தில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்கள் மீதும், எரிவாயுக் குழாய்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, ஏமன் மீது பெரிய அளவிலான தாக்குதலை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஹவுதிகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹவுதி அமைப்புக்கு எதிராக சவூதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இந்த நாடுகள் நேரடியாக ஹவுதி அமைப்பு மீது தாக்குதல் நடத்தாவிட்டாலும் சவூதிக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
அதே போல கடந்த 2023-ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் 'ஆப்பரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன்' (Operation Prosperity Guardian) என்ற சர்வதேசக் கடற்படைப் பாதுகாப்பு கூட்டணியில் இணைந்து இஸ்ரேலும் ஹவுதி அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் சவூதிக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பு மீது பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்கனவே அவ்வப்போது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜெர்மனி, கிரீஸ், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகள் 'ஆப்பரேஷன் அஸ்பைட்ஸ்' (Operation Aspides) என்ற பெயரில் பாதுகாப்புப் படையை செங்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த படைகள் செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்குத் துணையாகச் சென்று , ஹவுதி அமைப்பின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஹவுதி என்ற ஒரு அமைப்புக்கு உலக நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

