மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, தீவிர தாக்குதல் நடத்தி, கடந்த ஆண்டு டிசம்பரின் தொடக்கத்தில் (டிச.8) ஆட்சியைக் கைப்பற்றியது. அந்நாட்டு அதிபராக இருந்த அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதைத் தடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது.
அதாவது, சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சிப் படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.
குறிப்பாக, சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் (டிசம்பர் 16, 2024) நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் என மதிப்பிடப்பட்டது. இஸ்ரேல் நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தில் 3.1 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சிரியா நாட்டிற்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன் குறித்த விவரங்களை அந்நாட்டு ராணுவமே வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லையில் இருந்து சுமார் 200 கிமீ உள்ளே சிரியாவில் இருந்த ஈரானுக்குச் சொந்தமான ஏவுகணை ஆலையை இஸ்ரேல் மொத்தமாகத் தாக்கி அழித்துள்ளது. சிரியா நாட்டில் அமைந்திருந்த ஈரான் ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து இஸ்ரேல் இந்த ஆபரேஷனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுகுறித்த விவரங்களே தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. ’ஆபரேஷன் மேனி வேஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேலிய விமானப்படை நடத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மொத்தம் 120 இஸ்ரேல் வீரர்கள் சிரியாவில் உள்ளே சென்று ஈரானுக்கு சொந்தமான ஏவுகணை உற்பத்தி ஆலையைத் தாக்கி அழித்துள்ளனர். சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி இருந்தபோதே இந்த ஆபரேஷனை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.
சிரியா நாட்டில் 230 முதல் 430 நிலத்திற்கு அடியில் அமைந்துள்ள இந்த ஏவுகணை உற்பத்தி ஆலையை 2021ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் இன்ஜின்களைக் கொண்ட 16 அறைகள் இருந்துள்ளன. இதை வைத்துத்தான் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவின் ஆசாத் ஆட்சிக்கும் ஏவுகணைகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் பல்வேறு வகையான 100 முதல் 300 ஏவுகணைகளை உற்பத்தி செய்யப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த ஆலையில் இருந்து 2 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்புக்கு இந்த ஆலையில் இருந்துதான் ஆயுதங்கள் சென்று வந்ததாகவும் இதை யூனிட் 669 உடன் இணைந்து இஸ்ரேல் விமானப் படையின் ஷால்டாக் பிரிவினர் வெற்றிகரமாக அழித்தாக இஸ்ரேல் கூறியுள்ளது. மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எந்தவொரு இஸ்ரேல் வீரரும் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாக்குதல் வெறும் மூன்று மணி நேரத்திற்குள்ளேயே முடிந்ததாகவும், இதில் 30 சிரியா காவலர்கள் இறந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த ஆலைக்குள் நுழையும் பொருட்டு அந்த நாட்டுப் பாதுகாவலர்களின் கவனத்தைத் திசைதிருப்ப IAF விமானம் மற்ற இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஷால்டாக் என்பது இஸ்ரேலின் ஒரு ரகசியப் பிரிவாகும். இது கமாண்டோ-பாணி சோதனைகள் உட்பட நீண்ட தூர ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மறுபுறம், யூனிட் 669, போர் தேடல் மற்றும் மீட்பு (CSAR) செய்கிறது - இது எதிரி பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் நிகழும் பணிகளில் தீவிரம் காட்டுகிறது. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இரண்டு மாத தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.