journalists Al Jazeera
உலகம்

இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதல்.. காஸாவில் 6 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதலில் பல பத்திரிகையாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.

Prakash J

இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதலில் காஸாவில் 6 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனால் பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மீண்டும் வெளிப்படுகின்றன.

இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக, அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 61,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். மேலும், காஸாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய இரட்டைத் தாக்குதலில் பல பத்திரிகையாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரில் அல் ஜசீரா புகைப்படக் கலைஞர் முகமது சலாமா, ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் ஹுசாம் அல்-மஸ்ரி, தி இன்டிபென்டன்ட் அரபிக் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்த நிருபர் மரியம் அபு தக்கா, பத்திரிகையாளர் மோவாஸ் அபு தாஹா, குட்ஸ் ஃபீட் நெட்வொர்க் மற்றும் மிடில் ஈஸ்ட் ஐ உள்ளிட்ட பிற ஊடகங்களில் பணிபுரிந்த அகமது அபு அஜீஸ், அல்-ஹயாத் அல்-ஜதிதா நிருபரான ஹசன் டூஹா ஆகியோர் அடங்குவர் என்று காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

"காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் இன்று நடந்த துயர சம்பவத்திற்கு இஸ்ரேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. பத்திரிகையாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களின் பணியையும் இஸ்ரேல் மதிக்கிறது. தாக்குதல் குறித்து விசாரணை தொடங்கப்படும்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும், ’அவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இத்தகையக் கொடூரச் செயலுக்கு உலகம் முழுவதிலிருந்து கண்டனம் குவிந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்!

இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "இந்த மிருகத்தனமான மோதலுக்கு மத்தியில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் முக்கியப் பணியை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் தீவிர அபாயங்களை இது எடுத்துக்காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஜெர்மனி, பிரெஞ்சு, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகளும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் தலைவர் திபாட் புருட்டின், "இது எப்போது, ​​எங்கே முடிவடையும்? சர்வதேச சட்டம் உள்ளது. மோதல்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உத்தரவாதங்கள் உள்ளன. ஆனால் அவை எதுவும் பொருந்துவதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

journalists

பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, ”இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக உலகம் உறுதியாகச் செயல்படத் தவறிவிட்டது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உறுதியாகச் செயல்படத் தவறிவிட்டாலும், காஸாவில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொலை செய்வது தொடர்கிறது" என்று குழுவின் அறிக்கை அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம், "பத்திரிகையாளர்களை குறிவைக்கும் அதன் வெறுக்கத்தக்க நடைமுறையை நிறுத்த வேண்டும். நியாயப்படுத்தப்படாமல் இஸ்ரேலால் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய கொலைகள் ஒரு திருப்புமுனை தருணமாக அமைய வேண்டும். இதற்காக, சர்வதேச தலைவர்கள் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

காஸா போர் தொடங்கியது முதல் இதுநாள் வரை 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் உள்ளூர் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.