ஹமாஸ், இஸ்ரேல் எக்ஸ் தளம்
உலகம்

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் | இன்றுவரை தொடரும் போர்.. இதுவரை நடந்தது என்ன?

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அது நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Prakash J

இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் சமீபத்திய திருப்பமாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் (பாலஸ்தீன ஆதரவு) நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது.

இந்த நிலையில், காஸாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (ஜன. 19) காலை முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

மேலும், காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அரசாங்க அமைச்சரவையும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் நைம் காசிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹமாஸும் இஸ்ரேலும் ஆறு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, அடுத்த ஆறு வாரங்களில் காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட 33 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் தொடரும் தாக்குதல்

மறுபுறம், காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்று அதிகாலை என்கிளேவின் தெற்கில், கான் யூனிஸுக்கு மேற்கே அல்-மவாசி அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். மற்றோர் இடத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இது, கடந்த ஜனவரி 15ஆம் தேதி போர் நிறுத்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்து இஸ்ரேலிய குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை குறைந்தது 119 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் இதுவரை நடந்தது என்ன?

அக்.7, 2023:

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அக்.27, 2023:

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போரைத் தொடங்கியது.

நவ.21, 2023:

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்தின்படி, ஒரு வாரகால போர்நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சில பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

டிச.28, 2023:

தொடர்ந்து புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மே 31, 2024:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்குத் தொடர்பாக போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசினார்.

காஸா இஸ்ரேல் போர்

ஜூன் 10, 2024:

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்த திட்டத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஜூலை 31, 2024:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலையைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது.

அக். 17, 2024:

தெற்கு காஸாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலியப் படையால் கொல்லப்பட்டார்.

நவ. 9, 2024:

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மத்தியஸ்தராக இருந்த கத்தார் விலகிக் கொண்டது.

நவ. 20, 2024:

உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது.

நவ. 27, 2024:

காஸா போரில் ஈடுபட்ட ஹமாஸின் கூட்டாளியான ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுடன் 13 மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர லெபனானுடன் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

டிச. 2, 2024:

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், ”தாம் பதவியேற்பதற்குள் ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகள் விடுவிக்க வேண்டும்” என எச்சரித்திருந்தார்.

ஜன. 13, 2025:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் போர் நிறுத்தம் குறித்து தொலைபேசியில் உரையாடினர்.

ஜன. 15, 2025:

காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நாளை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜன. 17, 2025:

காஸா போர் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வரவும் அனுமதியளித்தது.

இஸ்ரேல், ஹமாஸ்

ஜன. 18, 2025:

போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்திற்கு இடையே, இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதுவரை 470 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று உள்ளது. இதில், 46,788க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,10,453 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர்.