isis x page
உலகம்

ஈராக் மற்றும் அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல்.. ISIS தலைவர் பலி!

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதக் குழுவின் உலகளாவிய நடவடிக்கைகளின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Prakash J

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், உலக அளவில் பயங்கரவாத அமைப்புகள் மீதான தாக்குதல்களை அந்நாட்டுப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சிரியா, சோமாலியா போன்ற நாடுகளில் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அந்நாட்டு படையினர், நேற்று அல் அன்பார் மாகாணத்தில் ஒரு துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க படையினரின் உதவியுடன் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ’அபு கதீஜா’ என்றும் அழைக்கப்படும் அப்துல்லா மக்கி முஸ்லிஹ் அல்-ரிஃபாய் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கதீஜா, இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதக் குழுவின் உலகளாவிய நடவடிக்கைகளின் தலைவராக இருந்தார். தவிர, உலகளவில் அந்தக் குழுவின் இரண்டாவது தளபதியாக இருந்தார். அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, அபு கதீஜா உலகளவில் பயங்கரவாதக் குழுவின் தளவாடங்கள், திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மையை மேற்பார்வையிட்டார். மார்ச் 13 அன்று நடந்த இந்தத் தாக்குதலில் மற்றொரு ISIS செயல்பாட்டாளரும் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலைப் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப், “இன்று ஈராக்கில் தப்பியோடிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார். அவர் நமது துணிச்சலான ராணுவ வீரர்களின் தாக்குதலால் கொல்லப்பட்டார். அவரது துயர வாழ்க்கை முடிவுக்கு வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.