உலகம்

60 வருட தேடலுக்குப் பின் 103 வயது அம்மாவை கண்டுபிடித்த 80 வயது பெண்!

60 வருட தேடலுக்குப் பின் 103 வயது அம்மாவை கண்டுபிடித்த 80 வயது பெண்!

webteam

அறுபது வருட தேடலுக்குப் பின், தனது 103 வயது அம்மாவை 80 வயது பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.  

அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் எய்லீன் மாக்கென். இவரது அம்மா எலிசபெத். அம்மாவின் பெயர் தெரியுமே தவிர, அவர் யார், எங்கிருக்கிறார் என்று எய்லீனுக்குத் தெரியாது. தனது 19 வயதில், அம்மாவை தேடத் தொடங்கிய எய்லீனுக்கு இப்போது வயது 80! கடைசி வரை அம்மாவை கண்டுபிடிக்கவே முடியாதா? என்ற கவலையோடு தேடிக்கொண்டிருந்தார். 

அதற்கான சின்ன க்ளு கூட கிடைக்கவில்லை அவருக்கு. இருந்தாலும் மனம் தளராமல் தேடி கொண்டிருந்தார். கடந்த வருடம் அயர்லாந்தில் ஆர்டிஇ ரேடியோ சார்பில் நடத்தப்படும் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பதைப் பற்றி சொன்னார். இதையடுத்து பரம்பரையியல் வல்லுநர் (genealogist) உதவியோடு, அவர் அம்மாவை கண்டுபிடித்துள்ளார். 

ஸ்காட்லாந்தில் இருக்கும் அவர் அம்மாவின் வீட்டைக் கண்டுபிடித்து, முதன் முதலில் நடுங்கும் விரலுடன் கதவைத் தட்டினார், எய்லீன். கதவை ஓர் ஆண் திறந்தார். அவர் எய்லீனின் சகோதரர் என்பது பிறகு தெரியவந்தது. உள்ளே சென்று தனது அம்மா எலிசபெத்தின் அருகில் அமர்ந்தார். ’நான் அயர்லாந்தில் இருந்து வருகிறேன்’ என்றார் எய்லீன். பிறகு, ’நான் உங்கள் மகள்’ என்றதும் கையை பிடித்துக்கொண்ட எலிச பெத் அதை நீண்ட நேரமாக விடவே இல்லையாம்!

தனது அம்மாவைக் கண்டுபிடித்தது பற்றி எய்லீன் கூறும்போது, ‘’பரம்பரையியல் வல்லுநர்தான் ஒரு நாள் எனக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். மகிழ்ச்சி தாங்கவில்லை. நான், என் கணவர், மகள், மருமகன் ஆகியோருடன் அம்மாவின் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எங்க ளை ஏற்றுக்கொண்டார்கள். அம்மாவுடன் சுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். அம்மா அழகாக இருக்கிறார். அவருக்கு இனிமையான குடும்பம். என் மகளிடம் சொன்னேன், ’’யாரென்று தெரியாமலேயே, என் வாழ்க்கை முழுவதும் இந்த பெண் மீது அன்பு செலுத்திக் கொண்டிருந் தேன்’’ என்று. இப்போது நான் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறேன்’’ என்றார். எலிசபெத்துக்கு இன்று 104 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.