ireland man attacked usa fighter web
உலகம்

அதிரடி காட்டிய தனி ஒருவர்.. அமெரிக்க போர் விமானத்தை அடித்து நொறுக்கிய 40 வயது நபர்!

அமெரிக்க ராணுவத்தின் விமானத்தை ஒரு நபர் தாக்கியுள்ள சம்பவம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

அயர்லாந்தின் ஷானன் விமான நிலையத்தில் 40 வயது நபர் பாதுகாக்கப்பட்ட பகுதியை மீறி நுழைந்து, அமெரிக்க ராணுவத்தின் C-130 Hercules போர் விமானத்தின் இறக்கையில் ஏறி சுத்தியலால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நடவடிக்கைக்கு எரிபொருள் நிரப்ப இந்த விமான நிலையம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அங்கு நிலவும் போர் எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்துள்ளதைக் காட்டுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

அயர்லாந்தின் ஷானன் (Shannon) விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஈரானின் போர் நடவடிக்கைக்கு எரிபொருள் நிரப்ப இந்த விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அமெரிக்க ராணுவம் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 11-ம் தேதியன்று, காலை 9:50 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஷானன் விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் C-130 Hercules என்ற ராணுவப் போக்குவரத்து விமானத்தின் இறக்கையினில் ஏறியுள்ளார்.

பின்னர் அந்த விமானத்தில் சுத்தியல் போன்ற பொருளால் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னரே அங்கு இருந்த பாதுகாவலர்கள் இதனை கவனித்து அந்த இடத்துக்கு வந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயல்பாடுகள் சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நபரால் விமானத்துக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நபர் ஒரு மிகப்பெரிய ராணுவ விமானத்தின் மீது ஏறி தனது எதிர்ப்பைக் காட்டியது, அயர்லாந்தில் நிலவும் போர் எதிர்ப்பு உணர்வின் தீவிரத்தைக் காட்டுவதாக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு தனி நபர் இவ்வளவு பெரிய பாதுகாப்பையும் மீறி விமானத்தின் மீது ஏறியது விமான நிலையப் பாதுகாப்பில் உள்ள ஓட்டையையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.