iran flight  Reuters
உலகம்

ஈரான் விமானத்தைத் தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பிய ஈராக்!

அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் காரணமாக, ஈரான் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் ஈராக் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஈரான் தேசிய கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் ஈராக்கில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி விமானத்தில் இருந்து இறங்க முடியாமல் மீண்டும் ஈரானுக்கே திரும்பிச் சென்றுள்ளது.

ஈரான் கால்பந்து அணி, ஈராக்கின் பஸ்ரா நகரில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில் விளையாடுவதற்காகப் பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் ஈராக், ஈரான், லெபனான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

iran air

இந்நிலையில், ஈரான் அணியை ஏற்றிச் சென்ற விமானம் பஸ்ரா விமான நிலையத்தில் தரையிறங்க ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி மறுத்தது. இதையடுத்து அந்த விமானம் ஈரானின் அபாதான் விமான நிலையத்துக்குத் திரும்பிச் சென்றது. தற்போது ஈரான் வீரர்கள் சாலை மார்க்கமாக பஸ்ராவுக்குப் பயணம் செய்ய உள்ளதாக ஈரான் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ஈரான் விமான நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாஷிங்டன் எச்சரித்துள்ளது.

மேலும், ஈரான் விமானங்களுக்கு சேவை வழங்கும் விமான நிலையங்கள் அமெரிக்க டாலர் நிதி அமைப்பிலிருந்து விலக்கப்படலாம் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அமெரிக்கத் தடைகளை மீறிவிடக் கூடாது என்பதற்காக ஈராக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.