செய்தியாளர் - M. மீரா
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரில் - நிரந்தர போர் நிறுத்தம் குறித்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரானும் அமெரிக்காவும் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டது . இந்த ஒப்பந்தத்தில் ஈரான் அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது உருவாக்கவோ கூடாது என்பதை உறுதிபடுத்தியது. கையிருப்பில் இருக்கும் செறிவூட்டப்பட்ட பொருட்களை அகற்றுவதையும் ஒப்புக் கொண்டிருந்தது ஈரான் .
இதற்கிடையில் அணுசக்தி நிலையங்களை ஈரான் மீண்டும் கட்டமைத்து வருவதாக புதிய சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அமெரிக்காவின் சிஎன்என் (CNN) மற்றும் சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ISIS) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த சாட்டிலைட்ஆய்வறிக்கை, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று கூறுவதற்கு முன்பே ஈரான் அந்த ஒப்பந்தத்தை மீறியதா என்ற கேள்விகளை இந்தப் படங்கள் எழுப்புவதாக CNN ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வான்டோர் டெக்னாலஜிஸ் (Vantor Technologies) மற்றும் பிளானட் லேப்ஸ் நிறுவனங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாத தொடக்கத்தில் எடுத்த சாட்டிலைட் படங்கள் ஈரானின் பார்ச்சின் (Parchin) ராணுவ வளாகத்தில் தீவிர புனரமைப்புப் பணிகள் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்குவதற்கு முன்பு, ஈரான் பார்ச்சின் வளாகத்தைச் சுற்றி ஒரு கான்கிரீட் கவசத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்பு அமெரிக்க-தாக்குதலால் அந்தத் தளம் தாக்கப்பட்டு சேதமடைந்தது. வெளிவந்திருக்கும் புதிய சாட்டிலைட் படங்களில், ஈரான் அந்தத் தளத்தைச் சரிசெய்து புனரமைப்பதை காணலாம். மேலும் தற்பொழுது கனரக கிரேன்கள் மற்றும் இரும்பு வலைகளைக் கொண்டு நிரந்தரமாக கான்கிரீட் போட்டு மூடி, அதன் மேல் மண்ணைக் கொட்டும் காட்சிகளை அந்தப் படங்கள் காட்டுகிறது.
மற்றுமொரு இடமான பிக்ஆக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) என்றழைக்கப்படும் பிகோலாங்-காஸ் லா மலைப்பகுதியிலும் ஈரான் தனது நிலத்தடி அணுசக்தி கட்டுமானங்களை சீர்படுத்தியுள்ளது. இங்கு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில், சுரங்கப்பாதைகளுக்குள் வாகனங்கள் சென்று வருவது காணப்பட்டது. இந்த சுரங்கத் தளம், அணுசக்தி செறிவூட்டலுக்குத் தேவையான அதிநவீன Centrifuges கருவிகளை தயாரிக்கும் முக்கிய மையமாக இருக்கலாம் என அணுசக்தி நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இஸ்பஹான், ஃபோர்டோ மற்றும் நதான்ஸ் போன்ற முக்கிய அணுசக்தி மையங்கள் இதுவரை அமெரிக்க தாக்குதலில் பாதிப்படையவில்லை என்றும் CNN வெளியிட்ட செய்தி கூறுகிறது. சமீபத்திய சாட்டிலைட் படங்கள், சில ஏவுகணை மையங்களைச் சீரமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதையும் காட்டுகிறது.
வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதாக அமெரிக் கருதியதாக கூறப்பட்ட நிலையில், தற்போதைய ஈரானின் இந்த ரகசிய நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.