ஹார்முஸ் | எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு!!
செய்தியாளர் - M. மீரா
ஜூலை 8 அன்று ஈரான் உடனான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) சென்றுகொண்டிருந்த சைப்ரஸ் நாட்டு சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு இந்திய மாலுமி மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இந்தக் கப்பல் அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாகக் கூறி, ஈரானின் IRGC துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிபர் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில் ஈரான் மீது வரலாறு காணாத வான்வழித் தாக்குதலை ஒரே இரவில் நடத்தியது.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் தீவுகளில் அமைந்துள்ள சுமார் 140 ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள், ட்ரோன் மையங்கள் மற்றும் கடலோர கண்காணிப்பு ரேடார்கள் இந்த ஏவுகணை மழையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரான் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விலையை தற்பொழுது அவர்கள் செலுத்துகிறார்கள் என்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலடியாக ஈரான், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் அதிர்ந்து போயுள்ளது.
ஈரான் ராணுவம் ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச போக்குவரத்துக்காக முழுமையாக மூடுவதாக அறிவித்திருந்தது இதற்கு பதில் கூறியிருக்கும் அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் அனைத்து கப்பல்களுக்கும் அது திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) இன்று தெரிவித்துள்ளது.
இந்த நீரிணையின் எதிர்காலம் மற்றும் அதை இனிவரும் காலங்களில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஈரானும் ஓமனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஈரானின் தேவையற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான அறிவிப்புகள் இருந்தபோதிலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது.

