செய்தியாளர்; M. மீரா
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக யார் செல்லலாம்? எந்த நாட்டுக் கப்பல்களுக்கு தடை? என்ன சரக்குகளை எடுத்துச் செல்லலாம்? இதற்கெல்லாம் விதிகளை உருவாக்கும் வகையில் ஈரான் தற்போது புதிய மசோதாவை தயாரித்து வருகிறது. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஈரானின் FARS செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்தப் புதிய மசோதா தற்போது ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதாவில் இஸ்ரேலிய கப்பல்கள் மட்டுமின்றி, ஈரானுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் நாடுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புடைய ராணுவ மற்றும் சிவில் சரக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமல்ல, அத்தகைய கப்பல்களுக்கு அல்லது சரக்குகளுக்கு எதிராக இழப்பீடு வழங்கப்படும் வரை, அவற்றின் ஹார்முஸ் பயணத்தைத் தடுக்கவும் ஈரான் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. ஈரான் முன்மொழிந்துள்ள சட்டத்தின்படி, கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். கப்பலில் எடுத்துச் செல்லப்படும் சரக்கின் மதிப்பில் 20 சதவீதம்வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை அனைவருக்கும் மூடப்போவதில்லை. அனுமதி பெறும் கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கலாம். அதற்காக, ஈரான் தனது நாணயத்தில் போக்குவரத்துக் கட்டணத்தை வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தக் கட்டணம், பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்துக்கான செலவுகளை ஈடுசெய்யும் என ஈரான் கூறுகிறது. ஹார்முஸ் நீரிணையில் மாற்று கடல்வழிப் பாதை அல்லது இரண்டாவது corridor உருவாக்கப்படுவதை ஈரான் அனுமதிக்காது என்று மேஜர் ஜெனரல் மொஹ்சின் ரெசாய் எச்சரித்துள்ளார்
ஹார்முஸ் பகுதியில் செயல்படும் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் படைகள் கடுமையான ஆபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கைதான் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஹார்முஸ் வழியாக யார் செல்கிறார்கள், என்ன சரக்குகளை எடுத்துச் செல்கிறார்கள், எந்த நிபந்தனைகளில் செல்கிறார்கள் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஈரான் கூறுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் நீண்டகாலத் தடங்கல் ஏற்பட்டால், அதன் தாக்கம் மத்திய கிழக்கைத் தாண்டி எண்ணெய் விலை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளிலும் எதிரொலிக்கக்கூடும். இதனால், ஈரானின் புதிய மசோதா வெறும் சட்ட நடவடிக்கையாக மட்டுமின்றி, ஹார்முஸ் மீதான தனது செல்வாக்கை வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.