jelly fish drone  AI - PT
உலகம்

அமெரிக்கா போர்விமானத்தை வீழ்த்திய ஈரானின் 'jelly fish' ட்ரோன்.. பின்னணி என்ன?

விமானம் வெடிப்பதற்கு சில மைக்ரோ விநாடிகளுக்கு முன்பு, பைலட் பாராசூட் மூலம் ஈரானின் அடர்ந்த, செங்குத்தான மலைப்பகுதிக்குள் குதித்து உயிர் தப்பினார்.

PT WEB

ஈரானின் ட்ரோன் கூட்டத் தாக்குதலால் வீழ்ந்த அமெரிக்க F-15E போர்விமானம், mesh network தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன் swarm திறன்களை வெளிப்படுத்துகிறது. ஜெல்லிமீன் போல அமைந்த ட்ரோன்கள் வானில், ‘கண்ணிவெடிப் பகுதி’போல இருந்ததாக பைலட் கூறியுள்ளார். ரஷ்யா, சீனா ஆதரவு பெற்றிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளது.

செய்தியாளர்: M. மீரா

வளைகுடா போரின்போது ஏப்ரல் மாதம் ஈரானின் எல்லைக்குள் நுழைந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன அமெரிக்க போர்விமானம் F-15 fighter jet ஒன்றை, கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்தி உடைத்து நொறுக்கியது ஈரானின் விமானப்படை. விமானம் வெடிப்பதற்கு சில மைக்ரோ விநாடிகளுக்கு முன்பு, பைலட் பாராசூட் மூலம் ஈரானின் அடர்ந்த, செங்குத்தான மலைப்பகுதிக்குள் குதித்து உயிர் தப்பினார். அந்த விமானி எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கக் கூடாது என்பதற்காக சுமார் 36 மணிநேரம், 70 மைல் தூரம் பசி, தாகத்தோடு அந்த மரணப் பள்ளத்தாக்குகளில் ஓடி ஒளிந்தார்.

US F-15 fighter jet

ஒட்டுமொத்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையும் அவரை மீட்க நள்ளிரவில் களத்தில் இறங்கியது. அமெரிக்காவின் special forces கமாண்டோக்கள் களமிறக்கப்பட்டு 64 அதிநவீன போர்விமானங்கள், 48 எரிபொருள் நிரப்பும் டாங்கர்கள், 3 ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 155 போர் விமானங்கள் ஈரானின் வான்பரப்பைச் சூழ்ந்து்கொண்டு, அந்தப் பைலட்டையும் அவரது சக அதிகாரியையும் மீட்டது .

மீட்கப்பட்ட அந்த விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது விமானத்திலிருந்து வெளியேறுவதற்கு முன் ஈரானின் பல ட்ரோன்கள் ஒன்றிணைந்து நகர்ந்தன. பெரிய ட்ரோன் ஒன்றின் அடியில் சிறிய ட்ரோன்கள் கால்களைப்போல இணைக்கப்பட்டிருந்ததால் அவை ஜெல்லிமீன்களைப் (jellyfish) போலத் தெரிந்தன என்று கூறியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சிகள் வானம் முழுவதும் காற்றில் மிதக்கும் ட்ரோன்களின் கண்ணிவெடிப் பகுதி (minefield of drones) என்று அந்த விமானி விவரித்ததாகCNN செய்தி கூறுகிறது.

US F-15 fighter jet

F-15E விமானம் வீழ்த்தப்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், ட்ரோன்களின் கூட்டமொன்று (drone swarm) இதில் பங்காற்றியிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விமானி அளித்த விவரங்கள் பல ட்ரோன்களை ஒருங்கிணைந்த ஒரே அமைப்பாக இணைக்கும் மெஷ் நெட்வொர்க் (mesh network) தொழில்நுட்பத்துடன் சார்ந்துபோகிறது. இத்தொழில்நுட்பம், ஒரே நேரத்தில் பல ட்ரோன்களை ஒருவரே இயக்கவோ அல்லது ட்ரோன்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு கூட்டாகச் செயல்படவோ வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.

ஈரானிடம் இதுபோன்ற திறன்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறியவில்லை. அதனால் mesh network அடிப்படையிலான ட்ரோன் அமைப்புகளுக்குப் பெயர் பெற்ற ரஷ்யாவும் சீனாவும் ஈரானின் இந்த ட்ரோன் மேம்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கலாம் என்று CNN செய்தி கூறுகிறது.