ஈரான் இஸ்ரேல் புதிய தலைமுறை
உலகம்

அடுத்த நொடியே மறுத்த ஈரான்.. “போரை நிறுத்திவிட்டேன்” எனக் கூறி மீண்டும் மூக்குடைபட்ட ட்ரம்ப்!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், அவர் அறிவித்த சில நிமிடங்களிலேயே ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மேலும் கோபமடைந்த ஈரான் நேற்றைய தினம் (23.6.2025) கத்தாரின் தோகாவில் உள்ள அமெரிக்க விமான படைக்கு சொந்தமான அல்-உதெய்த் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஒரு ஹாலில் மக்கள் அனைவரும் கதறி அடித்துக் கொண்டு ஓரும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது .

இந்தநிலையில்தான் இஸ்ரேல் ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பை டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, “அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை; அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார்; மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார்.” என்று தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஈரான் டிரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாகவோ ஈராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் தற்போதுவரை இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களாக என்ன நடந்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத மையங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. குறிப்பிடத்தக்க அளவில் ஈரானின் அணு ஆயுத மையங்கள் சேதம் ஆன நிலையில், இதற்கு ஈரான் தக்க பதிலடி அமெரிக்காவிற்கு கொடுக்கப்படும் என அறிவித்தது. அதுவரை இஸ்ரேல் ஈரானுக்கு இடையே நடைபெற்ற போரில் அமெரிக்கா தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது என ஈரானின் ஆதரவு நாடுகள் பல சாடின.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளான சவுதி அரேபியா கத்தார் ஓமன் உள்ளிட்டவை தனது எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டிற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என ஈரானின் உச்ச தலைவர் காமேனி தெரிவித்தார். இந்நிலையில்தான் மே 23ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளமான அல் உதெய்த்-ஐ குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்டிக் மிசைல் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானின் வான் பரப்பில் இருந்து பெர்சியன் வளைகுடா வழியாக கத்தார் நாட்டின் தலைநகரம் தோகாவிற்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக ஏவுகணை தாக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அமீரகம், பக்ரைன் உள்ளிட்டவை தங்களது வான் வழியை மூடின. குறிப்பாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு அந்தந்த நாட்டிற்கு வந்த விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில்தான் ஈரானின் ஏவுகணைகள் நேரடியாக தோஹா நகருக்கு அருகே இருக்கக்கூடிய அமெரிக்காவின் விமானப்படைத்தளமான அல் உதெய்த் நோக்கி சென்று தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கத்தாரில் உள்ள அல் உதீட் விமானத் தளத்தை குறிவைத்து நடப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை கத்தார் வான் பாதுகாப்பு வெற்றிகரமாக இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடவுளுக்கும், ஆயுதப்படை வீரர்களின் விழிப்புணர்விற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நன்றி, இந்த சம்பவம் மரணங்கள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

ஈரான் - கத்தார் உறவில் பெரும் விரிசல் :

பொதுவாக வளைகுடா நாடுகளில் ஈரானிற்கு ஓரளவு ஆதரவு கொடுத்த நாடாக கத்தார் விளங்கியது. குறிப்பாக 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு பாலஸ்தீன விவகாரம், எண்ணெய் பொருளாதாரம், இஸ்லாமிய சித்தாந்தம் உள்ளிட்டவற்றில் இரண்டு நாடுகளும் ஓரளவிற்கு நெருக்கமாக இருந்தன. அமெரிக்காவின் தலையீட்டை தாண்டி கத்தார் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியில் ஈரான் எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தியது இல்லை. ஆனால் தற்போது கத்தார் நாட்டில் ஏவுகணையை வீசி இருப்பதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஈரானை கத்தார் விமர்சித்துள்ளது. இருந்தாலும் கத்தார் மக்கள் மீதும், கத்தார் அரசு மீதும் ஈரான் எப்போதும் நன்மதிப்பும் அன்பும் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க தளத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தினோம் என்றும் இதனால் கத்தார் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

அடுத்தது என்ன ?

ஈரானின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் இது அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமான போக்கு என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கத்தார் தாக்குதலை முன்னணியாக வைத்துக்கொண்டு அமெரிக்கா ஈரான் மீது மேலும் தாக்குதல்களை தீவிர படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பின்னர் ஈரானிற்கு ஊக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் ஈரானிற்கு எங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்கிற வாக்குறுதியை கொடுத்துள்ளதால் ஈரானின் இன்றைய கத்தார் தாக்குதல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஈரானைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுமே ஈரானிற்கு எதிரான நடவடிக்கைகளில் திரும்புவதற்குள் ஈரான் சுதாரித்துக் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளில் விரைவில் ஈடுபடுவது அவசியம் என்றே பலரும் கூறுகிறார்கள். ஈரான் தனது தாக்குதலை நேரடியாக இஸ்ரேல் மீது மட்டுமே வைப்பது தற்போதைக்கு நல்லது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த நடத்த இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு பெருகும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக அமெரிக்காவின் விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்கிற பெயரில் அண்டை நாடுகளின் மீது ஏவுகணைகளை வீசினால் கட்டாயம் ஈரானிக்கு பின்னடைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இன்று கத்தார் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரான் ராஜதந்திர ரீதியில் கத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமராசப்படுத்துவதே தற்போதைய சூழலுக்கு நல்லது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.