இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரட்டைத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி 11 வயதில் ஆரம்பித்த பயணம், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவருடைய மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிற இன்னொரு வரலாற்றுக் குறிப்புகள் இணையத்தையே கலக்கி வருகின்றன. அதுகுறித்த தகவலை இங்கு அறிவோம்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரட்டைத் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரான், அதற்குத் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஆனால், இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருப்பதுதான் அந்நாட்டுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. அவரை ஒரேநாளில் கொன்றிருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் மார்தட்டிக் கொள்வது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. உலகையே அதிரவைத்திருக்கும் இந்தச் சம்பவம், வெறும் ஒரு தாக்குதல் மட்டுமல்ல, ஈரானின் எதிர்காலத்தையே மாற்றப்போகும் ஒரு பெரிய திருப்பம் ஆகும். 11 வயதில் ஆரம்பித்த அவரது பயணம், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அலி காமேனியின் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிற இன்னொரு வரலாற்றுக் குறிப்புகள் இணையத்தையே கலக்கி வருகின்றன. அதுகுறித்த தகவலை இங்கு அறிவோம்.
உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தின் சிரோலி கௌஸ்பூர் தாலுகாவில் அமைந்துள்ளது கிந்தூர் கிராமம். இதுதான் அலி கமேனியின் மூதாதையர் பிறந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இந்த கிந்தூர்தான் 1790ஆம் ஆண்டு பிறந்த இஸ்லாமிய ஷியா அறிஞரான சையத் அகமது முசாவியின் பிறப்பிடமாகும், அவரது சந்ததியினர் ஈரானின் அரசியல் மற்றும் மத நிலப்பரப்பை மறுவடிவமைக்கச் சென்றனர். அவரது பரம்பரையில் 1979 இஸ்லாமியப் புரட்சியின் சிற்பியான அயத்துல்லா ருஹோல்லா காமேனி மற்றும் ஈரானின் தற்போதைய உச்ச தலைவராக இருந்த அலி காமேனி ஆகியோர் அடங்குவர்.
1830ஆம் ஆண்டில், சையத் அகமது முசாவி தனது 40 வயதில் கிந்தூரிலிருந்து புறப்பட்டு, அவத் நவாப்புடன் ஈராக்கிற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். திரும்புவதற்குப் பதிலாக, அவர் ஈரானுக்குப் பயணம் செய்து இறுதியில் குமெய்ன் கிராமத்தில் குடியேறினார். தனது இந்திய வம்சாவளியைக் குறிக்கும் விதமாக, அவர் ’இந்தி’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். ஷியா அறிஞர் வட்டாரங்களில் சையத் அகமது முசாவி இந்தி (SYED AHMAD MUSAVI HINDI) என்று அறியப்பட்டார். அவரது குடும்பம் மதப் புலமையில் மூழ்கியிருந்தது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, அவரது பேரன் ருஹோல்லா காமேனி மேற்கத்திய ஆதரவு பெற்ற பஹ்லவி முடியாட்சிக்கு எதிரான முன்னணி எதிர்ப்புக் குரலாக உருவெடுத்தார்.
1978ஆம் ஆண்டில், ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, ஈரானிய ஆட்சி ஓர் அரசாங்க செய்தித்தாளில் காமெனியை, ‘இந்திய முகவர்’ என்று முத்திரை குத்தி அவமதிக்க முயன்றது. அவதூறு பிரசாரம் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது. இது ஷாவின் வீழ்ச்சிக்கும் 1979இல் இஸ்லாமியக் குடியரசு பிறப்பதற்கும் வழிவகுத்தது. காமெனி ஈரானின் முதல் உச்ச தலைவரானார். அவரது வாரிசான அலி காமெனியும் அதே முசாவி குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர். இன்றும் உத்தரப்பிரதேசத்தின் கிந்தூர் கிராமத்தின் ஒரு பகுதியான மஹால் மொஹல்லாவில், கமேனியின் மரபுவழி வந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் அலி காமேனியின் மரணம் பற்றிய செய்திகள் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளன.