Israeli Air Force commander Tomar Bar  x page
உலகம்

இஸ்ரேல் தளபதி கொல்லப்பட்டாரா? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மை நிலை என்ன?

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் விமானப்படைத் தளபதி டோமர் பார் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்த நிலையில், முதல் முறையாக அதுகுறித்து இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

Praveen Joshva L

இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் முதல் நாளிலேயே ஈரானின் உட்சபச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு ஈரானின் முக்கிய ராணுவ தலைவர்களும் இஸ்ரேல், அமெரிக்கா மேற்கொண்ட துல்லிய தாக்குதலால் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட ஈரான், இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவியது. மேலும் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்ட பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே ஈரான் நடத்திய 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' (Operation True Promise 4) ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலிய விமானப்படைத் தளபதி டோமர் பார் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை( IRGC) அறிவித்தது. இந்த செய்தி முக்கிய ஊடகங்களில் வெளியாகியது. இது இஸ்ரேலிலுக்கு மிகப் பெரிய தோல்வி என்றும், தங்களது அதிஉயர் தலைவர் கொல்லப்பட்டதற்கு ஈரான் பழிவாங்கியதாகவும் பேசப்பட்டது. ஆனால், ஈரானின் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக முதல்முறையாக இஸ்ரேல் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களில் விமானப்படைத் தளபதி டோமர் பார் நேரடியாகவே பங்கேற்று, F-15 போர் விமானத்தை ஓட்டிச் சென்றதாக இஸ்ரேல் விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Israeli Air Force commander Tomar Bar

மேலும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் வான்பரப்பில் ஈரானியப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய F-35 விமானிக்கு, டோமர் பார் தொலைபேசி வழியாகப் பாராட்டுத் தெரிவித்த ஆடியோ பதிவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.