Shahed drones  web
உலகம்

சவால் விட்ட ஈரான் ட்ரோன்கள்; தயாரித்தவர்களை தேடும் அமெரிக்கா.. தகவல் கூறினால் பரிசு!

ஈரானின் IRGC குட்ஸ் படையின் (IRGC Quds Force) ஆளில்லா விமானத் தயாரிப்புப் பிரிவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆறு நபர்கள் குறித்த தகவல்களுக்கு, 15 மில்லியன் டாலர் வரையிலான வெகுமதிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

PT WEB

அமெரிக்கா - ஈரான் போரில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால் இன்னமும் நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய போது மலிவான ஷாஹெட் ட்ரோன்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுத்து வந்தது. 20-50 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ட்ரோன்களை வீழ்த்த அமெரிக்கா மில்லியன் டாலர் மதிப்புள்ள THAAD, பேட்ரியாட் ஏவுகணைகள், F-16 விமானங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி அவர்களின் பாதுகாப்பு செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்தது.

iran

அமெரிக்காவின் ஆயுத கிடங்கில் நிகழ்ந்த பற்றாக்குறையே இடைக்கால போர் நிறுத்தத்திற்கான ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், ஈரான் ராணுவத்துக்கு ஆளில்லா வான்வழி வாகனங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தின் மையமாக செயல்படுபவர்கள் என்று கருதப்படும் 6 நபர்கள் குறித்து தகவல் கூறுபவர்களுக்கு பரிசு அறிவித்திருக்கிறது அமெரிக்கா.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) ஆளில்லா வான்வழி ஆயுதங்களை இயக்கும் 6 நபர்கள் குறித்த தகவல்களுக்கு, 15 மில்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 'நீதிக்கான வெகுமதிகள்' (Rewards for Justice) தனது X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், IRGC Quds படையின் ட்ரோன் விமானத் தயாரிப்புப் பிரிவாக 'கிமியா பார்ட் சிவன் நிறுவனம்' (Kimia Part Sivan Company KIPAS) செயல்படுகிறது. இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் அந்த 6 நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவித்திருக்கிறது.

டிரோன் சோதனை, மேம்பாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈரானிய இராணுவத்துடன் அந்த 6 நபர்கள் தொடர்பில் இருந்தார்கள் என்றும் அந்த பதிவு கூறுகிறது .

"ஐஆர்ஜிசி-யின் வருவாயை தடுக்க எங்களுக்கு உதவுங்கள், என்றும் இந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் அந்த மோசமான நபர்கள் (bad boys) குறித்து, எங்களுக்கு ஒரு தகவலை அனுப்பினால் 15 மில்லியன் டாலர்கள் என்று கூறி அந்த நபர்களின் ஒளிப்படங்களுடன் அவர்களின் பெயர்களையும் பதிவிட்டுள்ளது.

drones

KIPAS நிறுவனம் ஈரானின் ஆளில்லா வான்வழி அமைப்புகள் திட்டத்திற்கு முழுவதுமாக உதவி வருகிறது எனவும் மேற்கு ஆசியா முழுவதும் நடக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனத்தை ஈரான் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக, ஈரானின் ஆளில்லா விமானத் திறன்கள் அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது. ஈராக், சிரியா, ஏமன் மற்றும் பரந்த வளைகுடாப் பகுதி உட்பட பல மோதல் மண்டலங்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு முழுவதும் செயல்படும் நட்பு போராளிக் குழுக்களுக்கு ஈரான் மற்றும் ஐஆர்ஜிசி ஆளில்லா விமானங்களின் செயல்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

மேலும் ஈரானின் ஆளில்லா விமான உற்பத்தி விரிவடைந்து வருவதும் அதன் செயல்படும் திறனும் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதால் தான் இந்த பரிசு அறிவிப்பு என்று கூறப்படுகிறது .