ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையே பல நாள்களாகப் போர் நீடித்த வந்தது கடந்த திங்கட்கிழமைதான் போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும், குண்டுகளின் சத்தத்தோடு நடந்த இந்த கொடூர தாக்குதல்களால் அப்பகுதியில் உள்ள மக்கள் தற்போதுவரையிலும் பெரும் அச்சத்தில்தான் இருக்கின்றனர். இந்த பதற்றமான போரின் காரணமாக, ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரஷியாவுக்கு சென்றதாகத் தெரிகிறது. ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த பின், தனது 2 வயது மகனுடன் கர்ப்பிணித் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவனின் அருகே நின்று கொண்டிருந்த ரஷியர் ஒருவர், சிறுவனைத் தூக்கி தரையில் பலமாக வீசியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுவனின் மண்டை ஓடு எலும்பு முறிந்ததுடன், முதுகுத் தண்டிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவத்தை கண்டு சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைய , உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய ஊழியர்கள், சிறுவனை கொடூரமாக தாக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்ற சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அதிர்ச்சிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் விளாதிமிர் விட்கோவ் (31) என்பது தெரிய வந்தது. மேலும், சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல் இனவெறி அடிப்படையிலா? வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.