Houthis Reuters
உலகம்

ரகசிய டீல்! அமெரிக்கா செய்த துரோகம்.. கைவிடப்பட்ட சவுதி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஈரான்!

ஏற்கனவே ஈரானுடனான மோதலில் அமெரிக்கா கவனம் செலுத்தி வரும் நிலையில், ஏமனில் மற்றொரு பெரிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை வாஷிங்டன் தவிர்க்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ஏமன் உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஹவுதி படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏமனில் ஹவுதி படைகள் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோகா (Mocha) துறைமுக நகரம், பாப் அல்-மந்தப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரம், செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான மயூன்/பெரிம் தீவையும் கைப்பற்றி அதன்மூலம் சவூதியையும் தாக்கி வருகின்றனர்.

Houthi - Saudi Crisis

ஹவுதி அமைப்பு செங்கடல் கடற்கரையில் வேகமாக முன்னேறியிருப்பது சவுதி அரேபியாவுக்கு கூடுதல் பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதிக்கும் இது முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த சமயத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாக Reuters தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்கா நேரடியாக ஹவுதிகளுக்கு எதிரான புதிய போர்முனையைத் திறக்க விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இதற்குப் பதிலாக சவுதிக்கு உளவுத்துறை மற்றும் இலக்கு தொடர்பான ஆதரவை வழங்கும் அணுகுமுறையை வாஷிங்டன் எடுத்துள்ளதாக Reuters தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஈரானுடனான மோதலில் அமெரிக்கா கவனம் செலுத்தி வரும் நிலையில், ஏமனில் மற்றொரு பெரிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை வாஷிங்டன் தவிர்க்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Houthi - Saudi crisis

இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஹவுதி பிரதிநிதிகள் ஓமனில் ரகசியமாக சந்தித்ததாக Reuters தெரிவித்துள்ளது. செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் மஸ்கட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், ஓமன் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க கப்பல்களை தாக்காமல் இருப்பது தொடர்பாக ஹவுதிகள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்ரேல் மற்றும் வர்த்தக கப்பல்களை குறிவைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா இந்த சந்திப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் ஹவுதிகளுடன் தொடர்பு இருப்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஈரான் தனது பிராந்திய ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியாவுடன் நெருங்கிய உறவு கொண்ட பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் ஈரான் மேற்கொண்டுள்ள உயர்மட்ட தொடர்புகள், பிராந்திய அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளன.

Abbas Araqchi

செப்டம்பர் 16ஆம் தேதி ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதானுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்தியத்தின் சமீபத்திய நிலவரம் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஈரான்–பாகிஸ்தான்–துருக்கி ராஜதந்திர தொடர்புகள், அமெரிக்கா–ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை மற்றும் சவுதி–ஹவுதி மோதல் ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. மத்திய கிழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் செங்கடல் வர்த்தகம், எண்ணெய் விநியோகம் மற்றும் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.