Iran - America War  AI
உலகம்

போர் நீண்டால் பேராபத்து! “ஈரான் வெல்லும்; அமெரிக்கா வீழும்!” – டிரம்ப்புக்கு எதிராக வெடித்த குரல்

"அமெரிக்கர்களால் கட்டணங்களைச் செலுத்த முடியவில்லை, ஈரானுடனான போரில் ஏற்கனவே தோல்வி" அமெரிக்கத் தலைவர் வெளியிட்ட அதிரடி உண்மை.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது அமெரிக்காவுக்கே பாதகமாக மாறும் என ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி கடுமையாக எச்சரித்துள்ளார். டிரம்ப் இந்தப் போரில் தோற்றுவிட்டார் என விமர்சித்த அவர், போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் வலிமை குறைந்து, ஈரானின் நிலை வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.

U.S. Senator Chris Murphy

NBC செய்தி நிறுவனத்திடம் பேசிய கனெக்டிகட் செனட்டர் மர்பி, அமெரிக்கா உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அது அமெரிக்காவுக்கு சாதகமற்ற ஒப்பந்தமாக இருந்தாலும், நீண்டகாலப் போரால் ஏற்படும் பாதிப்புகளைவிட அது குறைவாகவே இருக்கும் என அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணை இந்த மோதலின் முக்கிய மையமாகியுள்ளது. நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பொருளாதாரச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மர்பி குறிப்பிட்டார்.

தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தின் கீழ், ஹார்முஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை வழங்கப்படலாம் என அவர் கூறினார். அத்தகைய ஒப்பந்தம் ஈரானுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்றும், கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி ஈரான் தனது ராணுவத்தை மீண்டும் கட்டமைக்கவும், பிராந்தியத்தில் உள்ள தனது ஆதரவு குழுக்களுக்கு மீண்டும் உதவ முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்பந்தம் மோசமானதாக இருந்தாலும், அதை ஆதரிப்பதாக மர்பி தெரிவித்தார். காரணம், அதைவிட மோசமான மாற்று நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது வாதம் என்றார்.

hormuz

போரின் தாக்கம் போர்க்களத்தில் மட்டுமல்லாமல், அமெரிக்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையிலும் எதிரொலிப்பதாக மர்பி கூறினார். எரிபொருள் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 10 அமெரிக்கர்களில் 7 பேர் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மர்பியின் மிகப்பெரிய கவலை அமெரிக்காவின் ராணுவத் தயார்நிலை குறித்ததாகும். நீண்டகால மோதல் காரணமாக அமெரிக்காவின் இடைமறிக்கும் ஏவுகணைகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளின் கையிருப்பு பெருமளவு பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

XI & Putin

இதனால் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள், அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் குறைந்திருப்பதாகக் கருதி, முன்பு செய்யத் தயங்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துணிச்சலைப் பெறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். தற்போதைய போருக்கான கூடுதல் ராணுவ நிதியுதவியை ஆதரிக்கப் போவதில்லை என்றும் மர்பி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் குறைந்துபோன ஆயுத இருப்புகளை மீண்டும் நிரப்புவதற்கான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மர்பி கூறினார்.

அவரது வாதத்தின் மையப்புள்ளி ஒன்றே: ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அமெரிக்காவின் ராணுவ வலிமையை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

Mojaba Khamenei & Trump

மர்பியின் பார்வையில், ஒவ்வொரு நாளும் நீளும் போர் அமெரிக்காவை மேலும் பலவீனப்படுத்துகிறது. போர் நீளும் தோறும் அமெரிக்கா தளர்கிறது. ஈரான் வலுப்பெறுகிறது என்பதே டிரம்ப் நிர்வாகத்திற்கு அவர் விடுக்கும் முக்கிய எச்சரிக்கையாக உள்ளது.