Interpol தேடும் முன்னாள் தளபதிக்கு உச்ச பதவி.. அமெரிக்கா-இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்?
ஈரானின் சக்திவாய்ந்த IRGC முன்னாள் தளபதி மொஹ்சென் ரெசாயி, உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக நியமிக்கப்பட்டது, போர்க்கால அரசியல் சூழலில் மிகப் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. AMIA குண்டுவெடிப்பு வழக்கில் ஈரான் நிதியுதவி, ரெசாயி தொடர்பு குற்றச்சாட்டுகள் காரணமாக இன்டர்போல் Red Notice-ல் இருப்பவர் இப்போது பாதுகாப்பு, ராணுவ முடிவுகளில் மையப் பங்குக்கு வருவது அமெரிக்கா-இஸ்ரேலுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.
செய்தியாளர்- M. மீரா
ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையான IRGC-யின் முன்னாள் தளபதி மொஹ்சென் ரெசாயி, நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதான ரெசாயியின் இந்த நியமனம், ஈரான் போர்க்கால அரசியல் சூழலில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான உயர்மட்ட மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், முகமது பாகர் ஜோல்கத்ருக்குப் பதிலாக ரெசாயியை நியமித்துள்ளார். ஜோல்கத்ர் இனி ஈரானின் உச்ச தலைவரான மொஜ்தபா காமேனியின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் நடைமுறைத் தலைவராக (de facto leader) செயல்பட்டு வந்த அலி லரிஜானியை கடந்த மார்ச் மாத மத்தியில் இஸ்ரேல் ராணுவம் கொன்றது.
லரிஜானியின் மறைவுக்குப் பிறகு, இந்த உயரிய பாதுகாப்பு அமைப்பிற்குத் தலைமை தாங்க நியமிக்கப்படும் இரண்டாவது நபர் ரெசாயி ஆவார். ரெசாயி 1981 முதல் 1997 வரை IRGC-யின் தலைவராக இருந்தவர். இந்த காலகட்டம் ஈரான்-ஈராக் போரின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. அதன் பின்னர் பல முக்கிய அரசியல் பொறுப்புகளை வகித்த அவர், சமீபத்தில் மொஜ்தபா காமேனியின் இராணுவ ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார்.
தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடிக்கும் கடுமையான மோதலுக்கு மத்தியில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பின் தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
AMIA குண்டுவெடிப்பு வழக்கு
ரெசாயியின் நியமனம் சர்வதேச அளவில் கவனம் பெறுவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 1994-இல் நடைபெற்ற AMIA யூத சமூக மைய குண்டுவெடிப்பு வழக்காகும். இந்த தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அர்ஜென்டினா நீதித்துறை விசாரணைகளின்படி, இத்தாக்குதலுக்கு ஈரான் நிதியுதவி அளித்ததாகவும், இதன் பின்னணியில் ரெசாயி செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, 2007-ஆம் ஆண்டு முதல் அவரைப் பிடிப்பதற்காக இன்டர்போல் அமைப்பு Red Notice வெளியிட்டது. 2022-ல் ரெசாயி கத்தார் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவரைக் கைது செய்ய அர்ஜென்டினா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், அவரை கைது செய்ய முடியவில்லை. முன்னதாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இவர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கப்பல் வழித்தடத்தையும் ஈரான் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள ரெசாயி, ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு என்பது டஜன் கணக்கான அணுகுண்டுகளை விடவும் மிக முக்கியமானது என்று கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

