யார் இந்த காமேனி? ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் எப்படி ஈரானின் உச்ச தலைவரானார்? எதற்காக இவர் இப்போது குறிவைக்கப்பட்டார்? விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரமும் இவர் கையில் தான் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த தலைவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
உலகையே அதிர வைத்திருக்கும் இந்தச் சம்பவம் வெறும் ஒரு தாக்குதல் மட்டுமல்ல, ஈரானின் எதிர்காலத்தையே மாற்றப்போகும் ஒரு பெரிய திருப்பம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள காமேனியின் அலுவலகம் மற்றும் வீடு தரைமட்டமானது. இந்தத் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசு இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
1939-ஆம் ஆண்டு மஷாத் என்கிற ஒரு சின்ன ஊரில், மிகவும் ஏழ்மையான, மதக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் அலி காமேனி. சிறுவயதிலேயே வறுமையை அனுபவித்த இவர், தனது 11 வயதிலேயே ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த படிப்புகளை முழுமையாகக் கற்று முடித்து ஒரு மதகுருவாக மாறினார். அப்போதைய ஈரானிய மன்னர் ஷா-வுக்கு எதிராகப் போராடியதற்காக ஆறு முறை சிறைக்குச் சென்றார்.
1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, காமேனி ஈரானின் மிக முக்கியமான தலைவராக மாறினார். 1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகப் பதவி வகித்தார். அதன்பிறகு, ஈரானின் முதல் உச்ச தலைவரான கொமேனியின் மறைவுக்குப் பின், அந்த நாட்டின் மிக உயரிய பதவியான 'Supreme Leader' பதவிக்கு வந்தார். இந்தப் பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரை விடவும் அதிக அதிகாரம் கொண்டது. ராணுவம், நீதிமன்றம், வெளியுறவுக் கொள்கை என எல்லாமே காமேனியின் ஒற்றை உத்தரவின் கீழ் தான் செயல்பட்டு வந்தன.
காமேனியின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகச் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் பெரிய அளவில் ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து, அதன் மூலம் இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், அணுசக்தித் திட்டங்களில் அவர் காட்டிய பிடிவாதம் ஈரானை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தியது.
வெளிநாட்டுப் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, ஈரானுக்கு உள்ளேயே காமேனியின் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக 2022-இல் மஹ்சா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த பிறகு ஏற்பட்ட ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களும், 2026-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியும் காமேனிக்கு எதிரான மக்கள் கோபத்தை அதிகரித்தன. மக்களின் எதிர்ப்பை காமேனி ராணுவ பலத்தைக் காட்டி அடக்க முயன்றார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். இதைப் பார்த்த உலக நாடுகள் பலவும் காமேனிக்கு எதிராகக் குரல் கொடுத்து, அவருக்குப் பெரிய அளவில் நெருக்கடியைக் கொடுத்தன.
ஈரானின் அணு ஆயுதம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வியன்னாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட மறுப்பதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் வேளையிலேயே ஈரான் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது அமெரிக்காவும், இஸ்ரேலும். இந்தத் தாக்குதலில் காமேனியுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகளும் உயிரிழந்துள்ளனர். தற்போது ஈரானில் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 35 ஆண்டுகள் ஈரானை ஆட்டிப்படைத்த ஒரு வலிமையான தலைமை வீழ்ந்திருப்பது, அங்கு பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.