மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், இன்றுமுதல் அது தாக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால், இருதரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையால் உலகில் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்துவரும் ஈரான் ராணுவம், தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரித்துள்ளது. எதிரிகள் மண்டியிடும்வரை தாக்குதல் ஓயாது எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இனி அதிநவீன நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் எனவும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்களைத் தடுத்து திருப்பி அனுப்பிவருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்றுமுதல் மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட 18 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், “இன்று (ஏப்ரல் 1) தெஹ்ரான் நேரப்படி இரவு 8 மணி முதல், ஈரானில் நிகழும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஈடாக, இந்த நிறுவனங்கள் தங்களின் அந்தந்தப் பிரிவுகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டும்" என எச்சரித்துள்ளது. மேலும் அது, “இனிமேல் இலக்குகளை வடிவமைப்பதிலும் கண்காணிப்பதிலும் அமெரிக்க மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிப்பதால், இந்த முக்கிய நிறுவனங்களே நமது முறையான இலக்குகளாக இருக்கும் எனவும், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாகப் பணியிடங்களைவிட்டு வெளியேற வேண்டும்” எனவும் அது எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ளது வெள்ளை மாளிகை, ”சாத்தியமான எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது” எனத் உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா சமீபகாலமாக, தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை பெருமளவில் நம்பியுள்ளது. இந்தக் கருவிகள் தனித்தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றபோதிலும், அவற்றைக் கொண்டு சாத்தியமான அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு கண்காணிக்கிறது. இதையடுத்தே ஈரான், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.