G7 countries  Reuters
உலகம்

ஈரான் போர்| 10 கோடி பேரல் எண்ணெய்.. மிரட்டிய ட்ரம்ப்.. பணிந்த ஐரோப்பா?

ஈரான் போரால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க ஜி7 நாடுகள் அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

PT WEB

ஈரான் போரின் விளைவாக எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், ஜி7 நாடுகள் 10 கோடி பீப்பாய் எண்ணெய் வெளியிட திட்டமிட்டுள்ளன. டிரம்பின் அழுத்தத்தால் தான் ஐரோப்பா பணிந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது புதிய திட்டமா அல்லது முந்தைய அறிவிப்பின் தொடர்ச்சியா என்ற சந்தேகம் நிலவுகிறது.

செய்தியாளர் - M. மீரா

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஜி7 நாடுகள் அடுத்த 4 மாதங்களில் அவசரகால இருப்பிலிருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் டீசலை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இந்த அறிவிப்பு உண்மையில் புதிதாக எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்குமா அல்லது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின் தொடர்ச்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் போர் தொடரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 73 டாலரிலிருந்து 105 டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் டீசல் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

TRUMP

இதையடுத்து, ஐரோப்பிய நாடுகள் தங்களின் அவசரகால எண்ணெய் இருப்பிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் டீசலை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இல்லையெனில், அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு டீசல் ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய நேரிடும் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அழுத்தத்துக்குப் பிறகு, அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற ஜி7 கூட்டத்தில் எண்ணெய் இருப்பை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை டிரம்ப் வரவேற்று, ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் டீசலைச் சந்தைக்கு கொண்டுவருவதாகக் கூறினார்.

ஆனால், இந்த அறிவிப்பில் ஒரு முக்கியமான சந்தேகம் உள்ளது. மார்ச் மாதத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணெய் வெளியீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது அறிவிக்கப்பட்ட 10 கோடி பீப்பாய் இருப்பு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

G7 countries

ஏற்கெனவே வெளியிட வேண்டிய எண்ணெயில் பெரும்பகுதி விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும், புதிய இருப்பை வெளியிடுவது குறித்து சில நாடுகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிரான்ஸ் மட்டும் தனது இருப்பிலிருந்து ஒரு கோடி பீப்பாய் டீசலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெர்மனி உடனடியாகக் கூடுதல் எண்ணெயை வெளியிடத் திட்டமிடவில்லை எனத் தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய் இருப்பைக் கட்டுப்படுத்துவது யார்?

ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு கிடையாது. ஒவ்வொரு நாடும் தனது அவசரகால எண்ணெய் இருப்பைத் தனித்தனியாகப் பராமரிக்கிறது. எனவே, எண்ணெயை எப்போது வெளியிடுவது என்பதை அந்தந்த நாடுகளே தீர்மானிக்கின்றன. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

எண்ணெய் இருப்பை வெளியிடுவது குறுகிய காலத்தில் விலையைக் குறைக்க உதவலாம். ஆனால், போர் காரணமாக ஏற்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதிப்புகளை இது முழுமையாகத் தீர்க்காது.