அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இஸ்ரேல்–லெபனான் 10 நாள் போர்நிறுத்தத்தை அடுத்து, ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்களுக்கு முழு அனுமதி வழங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று நிபந்தனைகள் விதித்துள்ள ஈரான், மீறப்பட்டால் நீரிணை மீண்டும் மூடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - விக்னேஷ்
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஹார்முஸ் நீரிணையை அனைத்து வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது X பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, லெபனான் நாட்டுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
முதலாவதாக, வணிக நோக்கிலான கப்பல்கள் மட்டுமே நீரிணையை கடக்க அனுமதிக்கப்படும் எனவும் இராணுவக் கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, கப்பல்கள் ஈரான் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட குறிப்பிட்ட பாதைகளின் வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும் என ஈரான் நிர்பந்திக்கிறது.
மூன்றாவதாக, கப்பல்கள் கடந்து செல்வதற்கு முன், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தலைமையகத்துடன் ஒருங்கிணைந்து அனுமதி பெற வேண்டும். மேலும், கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது, அதில் உள்ள பணியாளர்கள் யார், என்ன சரக்கு கொண்டு செல்லப்படுகிறது போன்ற விவரங்களை வழங்க வேண்டும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
அதோடு, ஒருவேளை கடற்படை முற்றுகை தொடருமேயானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.