ஹார்முஸ் நீரிணை திறப்பு.. ஈரானின் திடீர் மனமாற்றம் ஏன்?
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்த ஈரான், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதித்த நிலையில், ஹார்முஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனால் 2 வார காலம் இடைக்கால போர் நிறுத்தம் அமலானது. இருப்பினும் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வந்தது. இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது.
நேற்று இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஹார்முஸ் நீரிணையை அனைத்து வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது X பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, லெபனான் நாட்டுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச எண்ணெய் சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியில் விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் குறைந்து வந்தது. தற்போது ஹார்முஸ் மொத்தமாக திறக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

