செய்தியாளர் - M. மீரா -
அமெரிக்கா–ஈரான் மோதல் நீடித்து வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை விற்பனை செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைப் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நீதித்துறை மையத்தைச் சேர்ந்த ஹசன் அப்துல்லியன்பூர் இதுகுறித்து தெரிவித்ததாக அந்நாட்டு Mizan செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
எத்தனை கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான எண்ணிக்கையை ஈரான் வெளியிடவில்லை. ஆனால், கப்பல்கள் மற்றும் சரக்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடலில் கைப்பற்றப்படும் சொத்துகள் போரின் பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், ’அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், போரின் புவியியல் எல்லையை மாற்றுவோம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது. மேலும், நீண்டகால மோதலுக்கு தங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் IRGC கூறியுள்ளது.
இந்தப் பதற்றத்திற்கு மத்தியில் உலகின் முக்கியமான எரிசக்தி கடல் வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. செப்டம்பர் 21 அன்று, அடையாளம் தெரியாத ஏவுகணைகள் LPG டேங்கர் ஒன்றைத் தாக்கியதாக UK Maritime Trade Operations (கடல்சார் வர்த்தக கண்காணிப்பு நிறுவனம்) தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே நாளில் மற்றொரு டேங்கர் அடையாளம் தெரியாத எறி பொருளால் தாக்கப்பட்டதில் 2 பணியாளர்கள் லேசாக காயமடைந்தனர் .
இதற்கு சில நாட்களுக்கு முன்பும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு டேங்கர் மீது அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கி தீ ஏற்பட்டிருந்தது. இதனால், உலகின் முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் மீதான பாதுகாப்பு கவலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தனது வழக்கமான ராணுவப் படைகளையும் எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Fars செய்தி நிறுவனத்தின் தகவல்படி, சிறப்புப் படைகள், விரைவுத் தாக்குதல் பிரிவுகள், இயந்திர மயமாக்கப்பட்ட படைகள் மற்றும் பீரங்கி பிரிவுகள் உள்ளிட்டவை எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடாவை ஒட்டிய மக்ரான் கடற்கரையில் படை குவிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வழக்கமான ராணுவமான Artesh-ல் சுமார் 4.2 லட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது எத்தனை வீரர்கள் எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், ஏற்கெனவே ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கடற்படை மோதல்களால் தீவிரமடைந்துள்ள அமெரிக்கா–ஈரான் மோதல், நிலப்பரப்பிலும் விரிவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா தரைவழி படையெடுப்புக்கான திட்டத்தை அறிவித்ததாக உறுதியான தகவல் இல்லை.