ஈரான் விமானங்களுக்கு உலகளவில் தடை? அமெரிக்காவின் புதிய ECONOMIC WEAPON?
செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் போரின் முக்கிய மையமாக மாறியுள்ளது. ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தைகளில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் போர் தற்போது ஒரு ராணுவ மோதலாக மட்டுமின்றி, எண்ணெய், கப்பல் போக்குவரத்து, உலக எரிபொருள் விலை மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு ஆகியவற்றையும் நேரடியாக பாதிக்கும் சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் விமான நிறுவனங்களை சர்வதேச அளவில் முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஈரான் விமான நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வெளிநாட்டு விமான நிலையங்கள், எரிபொருள் நிறுவனங்கள், டிக்கெட் விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) விதிக்கப்படலாம் என அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் (Scott Bessent) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் 23 முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரலாம் என்றும், இதன் மூலம் ஈரான் விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படுவதில் கடும் தடைகள் ஏற்படும் என்றும் பெஸன்ட் தெரிவித்துள்ளார். அனைத்து ஈரான் விமான நிறுவனங்களும் உலகம் முழுவதும் முடக்கப்படும் என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் விமானங்கள் வெளிநாட்டு விமான நிலையங்களில் தரையிறங்கும்போது, அவற்றுக்கு விமான எரிபொருள் வழங்குதல், தரையிறங்கும் மற்றும் தரைச் சேவைகளை வழங்குதல், பயணச்சீட்டுகளை விற்பனை செய்தல் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்தால், அவை அமெரிக்க டாலர் நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்படக்கூடும் என பெஸன்ட் எச்சரித்துள்ளார்.
இதனால் ஏற்படும் தாக்கம் ஈரான் விமான நிறுவனங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றின் சர்வதேச செயல்பாடுகளுக்கு உதவும் விமான நிலையங்கள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கும் செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளது. செப்டம்பர் 8 அன்று அமெரிக்க கருவூலத் துறை, ஈரான் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய 36 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இதற்கு முன்பு தடை விதிக்கப்படாத ஈரான் விமான நிறுவனங்களும், வெளிநாடுகளில் இருந்து விமானத் துறைக்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப்படும் நிறுவனங்களும் இடம்பெற்றன.
ஏற்கெனவே தடைகளால் விமானங்கள், உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு, இந்த புதிய நடவடிக்கை சர்வதேச சேவைகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்.
சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் உடன் பொருளாதார பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே பெஸன்ட் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானின் முக்கிய பொருளாதார மற்றும் தூதரக ஆதரவாளர்களில் சீனாவும் ஒன்று என்பதால், அமெரிக்காவின் புதிய நடவடிக்கையில் சீன நிறுவனங்களின் நிலைப்பாடும் கவனிக்கப்படுகிறது. சீன நிதி அதிகாரிகளுடன் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பெஸன்ட் கூறியுள்ளார்.

