US - Iran PT
உலகம்

துப்பாக்கிகளுடன் 12 வயது குழந்தைகள்.. 14 மில்லியன் மக்கள்.. அமெரிக்காவை எதிர்க்க தயாரான ஈரான்!

மத்திய கிழக்கில் நிகழும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்க அதிபர் விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் 17 மணி நேரமே உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஏற்படக்கூடிய ஒரு நீடித்த மற்றும் கொடூரமான மோதலுக்கு ஈரான் தயாராகி வருகிறது.

மத்திய கிழக்கில் நிகழும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அணுமின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்; இதுவே கடைசி வாய்ப்பு என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் மத்திய கிழக்கில் பெரிய அளவில் போரின் தாக்கம் இருக்கும் என எண்ணப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்க அதிபர் விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் 17 மணி நேரமே உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஏற்படக்கூடிய ஒரு நீடித்த மற்றும் கொடூரமான மோதலுக்கு ஈரான் தயாராகி வருகிறது.

ட்ரம்ப்

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களில் பல உயர்மட்ட அதிகாரிகளை ஈரான் இழந்தபோதிலும், போரில் அது பின்வாங்க மறுத்து வருகிறது. தவிர, பேச்சுவார்த்தைக்கும் உடன்படவில்லை. ஆகையால் இது விரைவில், தரைவழிப் படையெடுப்பாக மாறக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டுகிறது.

இதையடுத்து, ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவில் படைகளைத் திரட்டி வருகிறது. ஒருவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தரைவழிப் படையெடுப்பை நடத்தினால், நாட்டிற்காகப் போரிட 14 மில்லியன் மக்கள்வரை தாமாக முன்வந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 7 மில்லியன் பேர் தாமாக முன்வந்துள்ளதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கூறியிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அடுத்த 5 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது.

இதுதவிர, துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்களின் முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்ட பசிஜ் படை , 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் தங்கள் படையில் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதில் அந்தச் சிறுவர்களின் கைகளிலும் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற வீரர்கள் போரிடுவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறும் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தவிர, அதிகாரிகள் கடைசிப் பாதுகாப்பு அரணாக மனிதச் சங்கிலிகளைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.