indian ship x page
உலகம்

‘Don't Worry நண்பா..’ ஹார்முஸ் பாதையில் இந்திய கப்பல்கள்.. உறுதியளித்த ஈரான்!

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்தும் நீடித்து வருகிறது.

Prakash J

மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரான் தனது தீவிரத்தைக் காட்டி வருகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக சரக்குக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்தும் நீடித்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான ராணுவத் தளவாடங்களைத் தாக்கி வருகிறது. இதற்கிடையே உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால், சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

மேலும் ஹார்முஸ் நீர்வழியில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு, உலகளாவிய சந்தைகளில் எரிபொருள் விலைகளை ஏற்கனவே உயர்த்தியுள்ளதுடன், விநியோகச் சங்கிலியின் நிலைத்தன்மை குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என்றும், ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியது. ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் இந்த வழியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் போகலாம் என அந்த நாடு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற சில நாடுகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், நிலைமை நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இந்திய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம் என ஈரான் தூதரகம் உறுதி அளித்துள்ளது. இந்திய ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும் மட்டுமே தீர்மானிக்கும்.

indian ship

இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை’ என கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை 'நட்பு நாடுகள்' என வகைப்படுத்தியுள்ள ஈரான், அவற்றின் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் ஈரான் ஹார்முஸ் ஜலஜந்தியில் முற்றுகையை அறிவித்ததிலிருந்து, இதுவரை ஆறு இந்தியக் கொடி ஏற்றப்பட்ட எரிபொருள் கப்பல்கள் அந்த முக்கிய எரிசக்தித் தடைப் பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன.