அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர் 100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் தெளிவான வெற்றியாளர் எவருமின்றி மோதல் தொடர்கிறது. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்போரால் இதுவரை ஈரானில் 3,400க்கும் அதிகமானோரும், லெபனானில் 3,600க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தநாடுகளுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், நிரந்தரமாக போரை கைவிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியிலேயே இருந்து வருகின்றன. ஈரானுக்கு ஆதரவாக, லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்திய நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருகிறது. நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமானால், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்தசூழலில் தான், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குலை நடத்திவருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அமலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் இருந்த நிலையில், லெபானான் மீதான தாக்குதலைக் கண்டித்து, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. குறிப்பாக, வடக்கு இஸ்ரேல் மீது 11 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக IDF தெரிவித்துள்ளது.
இந்த மோதல் பிராந்திய பதற்றத்தை அதிகரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வெளியின் பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு பதில் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது தெஹ்ரான் ஏவுகணைகளை ஏவியதற்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த இராணுவ நடவடிக்கை, அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தடம் புரளச் செய்துவிடும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம், "ஈரானிய பயங்கரவாத ஆட்சி மீண்டும் பயங்கரவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒரு பெரும் தவறைச் செய்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனான் முழுவதும் தொடர்ந்து செயல்படும், மேலும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும். அனுமதி கிடைத்தவுடன் ஈரானுக்கு வலுவாக பதிலடி கொடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறது.