சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேருமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மத்திய கிழக்கில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதிர்வை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அப்படி என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்..
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் பதற்றத்திற்கு மத்தியில், சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Makkah Joint Defence Agreement) எனக் கூறப்படும் இந்த ஒப்பந்தம், கடந்த ஆக.7ஆம் தேதி சவூதி அரேபியாவில் கையெழுத்தானது. இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்ற நேட்டோ (NATO) பாணியிலான பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட 3 நாடுகளைத் தவிர, இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் இதில் இணையும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்த மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேருமாறு ஈரான் அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "மெக்கா ஒப்பந்தத்தில் சேருவதற்கான அழைப்பை ஈரான் பெற்றுள்ளது, மேலும் இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலம் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒரு பிராந்திய பாதுகாப்பு குடையை நாடும் திசையில் நகர்கின்றன. இந்த முன்னேற்றம் ஈரானுக்கு கிடைத்த வெற்றி, ஏனெனில் அது நீண்டகாலமாக இதற்காக அழைப்பு விடுத்து வருகிறது" என்று ஈரானிய நாடாளுமன்றத்தின் கானே மெல்லட் செய்தி நிறுவனத்தின் தலைவர் மெஹ்தி ரஹிமி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கூற்றை, ஈரானோ அல்லது சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஈரானும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக பகையாளிகளாக இருந்த நிலையில், 2023-இல் இரு நாடுகளும் தூதரக உறவுகளை மீட்டெடுத்தன. எனினும், சமீபத்திய போர் மீண்டும் அவ்விரு நாடுகளுக்குள் இருக்கும் உறவைச் சீர்குலைத்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான், ரியாத் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ளன.
இந்த மோசமான உறவுகளுக்கு மத்தியில் மெக்கா ஒப்பந்தத்தில் ஈரான் எப்படி இணையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவுக்கு எதிராகவும், எதிர்காலத்திற்குத் தம்மை தயார்படுத்திக்கொள்ளும் அளவிலும் இந்த மெக்கா ஒப்பந்தம் இருக்கும் என இஸ்லாமிய நாடுகள் நம்பப்படும் நிலையில், ஈரானை சேர்க்கும்பட்சத்தில், அது அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.