NATO-வுக்கு நிகராக புதிய படை..? ஒன்றுசேரும் இஸ்லாமிய நாடுகள்! அமெரிக்காவுக்கு எதிராக திட்டம்!
சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இடையே கையெழுத்தான மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், எதிர்காலத்தில் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து, நேட்டோ அளவுக்கு ஒரு வலிமையான பலத்தைக் கொண்டிருக்கும் என வல்லுநர்கள் கணக்கிடுகின்றனர். இஸ்லாமிய நேட்டோ என்றால் என்ன, இதில் இணையப்போகும் நாடுகள் எவை என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் பதற்றத்திற்கு மத்தியில், சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இடையே மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Makkah Joint Defence Agreement) கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்ற நேட்டோ (NATO) பாணியிலான பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட 3 நாடுகளைத் தவிர, இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் இதில் இணையும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஆப்பிரிக்காவின் மிக வலிமையான இராணுவத்தையும், உலகின் 19ஆவது சக்திவாய்ந்த இராணுவத்தையும் கொண்டுள்ள எகிப்து, அடுத்ததாக இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எகிப்தைத் தவிர, கத்தார், குவைத், ஜோர்டான், அஜர்பைஜான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இந்த மெக்கா உடன்படிக்கையின் கூட்டமைப்பு, அது ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, சவூதி அரேபியாவின் பொருளாதார வலிமை, துருக்கியின் மேம்பட்ட இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் அணுஆயுத திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய பிராந்தியக் கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. அதேநோக்கில்தான் பிற நாடுகளும் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ஈரானின் இராணுவ வலிமை வெளிப்பாடு காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் அந்த நாடுகள் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே அமெரிக்க ராணுவத் தளங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் முகாமிட்டுள்ள போதிலும் துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகள் ஈரானால் பலத்த சேதத்துக்கு ஆளாகி வருகின்றன. இதன் காரணமாகவே, இப்பகுதியை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கில், வளைகுடா நட்பு நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த மெக்கா ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது நாளை அமெரிக்காவுக்கு எதிராகவும், எதிர்காலத்திற்குத் தம்மை தயார்படுத்திக்கொள்ளும் அளவிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ’இஸ்லாமிய நேட்டோ’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் தோற்றம் நேட்டோவுக்கு மாற்றானது எனக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் இந்தக் கூட்டமைப்பு பிராந்தியத்தில் அதிக நிதி பலத்தையும் பரந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறும் எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

