iran targets US airbase in Jordon, Bahrain  web
உலகம்

தீவிரமடையும் போர்| ஈரானில் இறங்கியடித்த அமெரிக்கா.. துணை நாடுகளை குறிவைத்து ஈரான் பதிலடி!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமாகிவருகின்றன. அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமடையும் தாக்குதல்கள் .

PT WEB

ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா–ஈரான் மோதல் 100 நாட்களை கடந்த நிலையில், ஈரான் சுட்டு வீழ்த்திய அபாச்சி ஹெலிகாப்டருக்கு பதிலடி என அமெரிக்கா ஈரானின் ரேடார், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களை ஜெட் போர் விமானங்களால் பல மணி நேரம் தாக்கியது. இதனால் ஏற்கெனவே நெருக்கடியான எண்ணெய் வர்த்தகப் பகுதி மேலும் பதற்றமடைந்துள்ளது.

செய்தியாளர்: M.மீரா

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர் 100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டாலும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறு இருக்கிறது.

Iran downed Apache helicopter

இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் 'அபாச்சி' ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானின் கடற்படை சுட்டு வீழ்த்தியதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இரவு அமெரிக்கா ஈரானின் ரேடார் தளங்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களைத் தாக்க ஜெட் போர் விமானங்கள் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் பல மணி நேரம் நடந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வாஷிங்டனுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள். பாரசீக வளைகுடாவின் வரலாற்றில், அத்துமீறி நுழையும் வெளியாட்களின் மோசமான தலைவிதிகள் பற்றிய பல அத்தியாயங்கள் உள்ளன என்றார்.

iran attacks Jordon

இந்த எச்சரிக்கைக்கு பின் ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் அல்-அஸ்ராக் தளம் உட்பட நான்கு முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டன; மேலும் அப்பகுதியில் மொத்தம் 21 வான் மற்றும் கடற்படைத் தளங்கள் தாக்கப்பட்டன என்றும் ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளமும் இது தவிர, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து புதிய தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான போர்ச் சூழல் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது