136 மீட்டர் உயரமுள்ள பி1 பாலம், தெஹ்ரானை மேற்கு நகரமான கராஜுடன் இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலம்தான் தற்போது அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமடைந்தது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. ஈரானும், மத்திய கிழக்கில் உள்ள அந்நாடுகளுக்கு எதிரான ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால், சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதில் எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலும் திறந்துவிட்டால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும், இல்லையெனில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் எதிர்கொள்ளத் தயார் எனவும் ஈரான் பதிலளித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக 60 நாடுகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில், ஈரானின் மிக உயரமான பாலம் பகுதியளவு சேதமடைந்துள்ளது. இடிந்து விழும் பாலத்தின் காணொளிக் காட்சியையும் அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். 136 மீட்டர் உயரமுள்ள பி1 பாலம், தெஹ்ரானை மேற்கு நகரமான கராஜுடன் இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலம்தான் தற்போது அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமடைந்தது. இந்தப் பாலம் அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் துணை ஆளுநரான கோத்ரத்துல்லா செய்ஃப், இந்தத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாலம் சேதம் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “முடிக்கப்படாத பாலங்கள் உட்பட பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களை சரணடையச் செய்யாது. அது சீர்குலைந்த ஓர் எதிரியின் தோல்வியையும் தார்மீக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு புறம், வடக்கிலுள்ள கராஜ் நகரில் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள எட்டு முக்கிய பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளது. அதன்படி,குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள ஷேக் சயீத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம்; சவூதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் கிங் ஃபஹத் தரைப்பாலம்; அத்துடன் ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகிய 8 பாலங்கள் இடம்பெற்றுள்ளன. வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள பல முக்கிய பாலங்கள் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.