சொன்னதைச் செய்துகாட்டிய ஈரான்.. 18 அமெரிக்க நிறுவனங்களில் அமேசான் மீது தாக்குதல்!
பஹ்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மையத்தின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறது. மேலும் ஈரான் ராணுவம், தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் தெரிவித்திருந்தது.
’ஈரானில் நிகழும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஈடாக, இந்த நிறுவனங்கள் தங்களின் அந்தந்தப் பிரிவுகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டும்’ என அது எச்சரித்திருந்தது. ஆனால், இதை முறியடிக்க தாங்கள் தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவும் பதிலடி கொடுத்திருந்தது. இந்த நிலையில், பஹ்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மையத்தின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்து ஒருசில நிறுவனங்களின் பெயர்களை ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டிருந்த நிலையில், அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அமேசான் நிறுவனத்தின் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது. மறுபுறம், துபாயில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளுக்குச் சொந்தமான தரவு மையத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) குறிவைத்ததாக சமீபத்திய இணைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், துபாய் அரசாங்கம் இந்தக் கூற்றுகளை உறுதியாக மறுத்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் எஃகு ஆலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் இந்த சமீபத்திய தாக்குதல் நடைபெற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் அமெரிக்க ராணுவம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகளவில் சார்ந்திருப்பதால், முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தரவு மையங்கள் ஈரானின் முக்கிய இலக்குகளாக மாறி வருகின்றன.

