Model image Reuters
உலகம்

முற்றிலும் முடங்கிய ஈரான்.. ஒருவேளை உணவுக்கே சிக்கல்.. பெரும் ஆபத்தில் பொதுமக்கள்!

அமெரிக்காவின் பொருளாதார முடக்கம் காரணமாக பெரும் வறுமையை நோக்கி ஈரான் மக்கள் தள்ளப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Praveen Joshva L

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலின் ஆதரவோடு அமெரிக்கா படையெடுத்தது. ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதேநேரம். ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது.

அதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் இருந்த அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில், ஈரானை ராணுவரீதியாக முடக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஈரானை பொருளாதாரரீதியாக முடக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஈரானின் முக்கிய வருவாயாக எண்ணெய் ஏற்றுமதி இருந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டு முடக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்த ஈரானின் ஏற்றுமதி தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளதாக 'கேப்பிட்டல் எகானமிக்ஸ்' (Capital Economics) என்னும் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தின் மையமாக உள்ள கார்க் தீவில் (Kharg Island) இருந்து கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓர் எண்ணெய் ஏற்றிய கப்பல்கூட கிளம்பவில்லை என கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளர் 'Kpler' அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

Reuters

ஏற்றுமதி, இறக்குமதி முடங்கியதால் ​ஈரானின் ஆண்டு பணவீக்கம் 80 சதவீதத்தைத் தாண்டிவிட்டதாகவும், உணவுப் பொருள்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும், ஈரானின் பொருளாதாரம் ஒரே ஆண்டில் 5.4 சதவீதம் சுருங்கும் என்றும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மானிய விலையில் கோதுமை, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது. அதே நேரம் அமெரிக்காவின் பொருளாதார முடக்கம் மேலும் தொடர்ந்தால் ஈரான் மாபெரும் வறுமையில் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.