ஈரானின் புதிய விளம்பரப் பலகைகள், ’போரில் வல்லவர்கள்’ என்ற சவாலான வாசகங்கள், ட்ரம்பின் தையல் போடப்பட்ட வாய், பாரசீக வளைகுடாவை வேட்டையாடும் களமாக காட்டும் மீன்பிடி வலை போன்ற காட்சிகளால், உள்ளூர் மக்களுக்கு தேசிய உணர்வையும் எதிரிகளுக்கு இராணுவ பலத்தையும் காட்டும் தகவல்-போர் மேடையாக மாறியுள்ளன; X, Instagram வழியாக இவை உடனே சர்வதேச டிஜிட்டல் செய்தியாக பரவுகின்றன.
செய்தியாளர் ; M. மீரா
பிப்ரவரி மாத இறுதியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானில் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், சுவர் ஓவியங்கள் நகரின் மிகவும் பரபரப்பான மற்றும் எளிதில் கண்ணில்படும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் தற்போதைய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு – குறிப்பாக ஈராக் போரின் போதிலிருந்து சுவர் ஓவியங்களையும் விளம்பரப் பலகைகளையும் அரசியல் தகவல்தொடர்புக்கான கருவியாக ஈரான் பயன்படுத்தி வருகிறது. போர் குறித்த இந்த விளம்பரப் பலகைகள் அதிக போக்குவரத்து உள்ள சதுக்கங்கள், மேம்பாலங்கள், முக்கியச் சாலைகளில் வைக்கப்படுகின்றன. புகைப்படமாக எடுத்து X, Instagram போன்ற தளங்களில் பகிரப்படும் விதமாகவே வடிவமைக்கப்படுகின்றன. அதனால் உள்ளூர் செய்தி உடனே சர்வதேச டிஜிட்டல் செய்தியாக மாறுகிறது.
ஏவுகணைகளில் கையால் எழுதப்பட்ட செய்திகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. ஓர் ஏவுகணையில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 175 சிறுமிகளும் ஆசிரியர்களும் கொல்லப்பட்ட நிகழ்வை குறிக்கும் வகையில் ’மினாப் சிறுமிகளுக்கு’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதற்கு நேர் கீழே ஆங்கிலத்தில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ’ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தீவில் பாதிக்கப்பட்ட சிறுமிகள்’ என்றும் மற்றோர் ஏவுகணையில் ’இளஞ்சிவப்பு ஜாக்கெட் அணிந்த சிறுமி’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது 2024-இல் நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஓர் இளம் ஈரானிய சிறுமியைப் பற்றிய குறிப்பு ஆகும்
இவ்வாறு இந்த விளம்பரத்தில் ஏவுகணைகளை அழிவு ஆயுதங்களாக மட்டும் காட்டாமல், அவற்றை துக்கம், பழிவாங்கல், நினைவு மற்றும் பாதுகாப்பின் சின்னங்களாக காட்டப்பட்டுள்ளது.
மற்றொரு விளம்பரப் பலகையில், நீங்கள் போரை விரும்பினால், நாங்கள் போரில் வல்லவர்கள் என்றும், இந்தப் பூமியிலிருந்து இஸ்ரேல் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மற்றொரு விளம்பரப் பலகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வாயின் மீது ஹார்முஸ் ஜலசந்தியின் படம் தைக்கப்பட்டிருப்பது போலவும், the breaking point எனவும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் ட்ரம்பின் வாயின் குறுக்கே இடப்பட்ட தையல்கள், ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ட்ரம்பின் அதிகாரம், அடக்குமுறை மற்றும் கட்டுப்பாட்டைக் குறிக்கின்றன.
மற்றொரு விளம்பரப் பலகை, பாரசீக வளைகுடாவில் விரிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மீன்பிடி வலை ஈரானிய இராணுவப் பலத்தை வெளிப்படுத்துகிறது. அந்த வலைக்குள் கைப்பற்றப்பட்ட அமெரிக்க விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் உள்ளன.
’முழு பாரசீக வளைகுடாவும் எங்கள் வேட்டையாடும் களம்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், மீன்பிடித்தலைப் போலவே, ஈரானின் போர் உத்தியும் வெறும் பலத்தை மட்டும் சார்ந்திருக்காமல், பொறுமை, மீள்திறன், கவனமான உத்தி மற்றும் நீண்டகால உறுதிப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு, இந்த பிரம்மாண்ட விளம்பரப் பலகைகளில் இடம்பெறுவது வெறும் விளம்பரம் அல்ல... பொது இடத்தைத் தகவல்-போரின் மேடையாக மாற்றும் அரசியல் உத்தி. ஒரு பலகை ஒரே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு செய்தியையும் சொல்கிறது, எதிரிகளுக்கு பலத்தையும் காட்டுகிறது. இவை வெறும் விளம்பர ஊடகங்களாக மட்டும் அல்லாமல் அரசியல் மற்றும் போர்க்கால தகவல் பரப்பலுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.