ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்பதாலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுக்கு வரும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதில் சதி இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அது இன்றுடன் முடியும் நிலையில், தொடர்ந்து, போரை நிறுத்தும் பணியில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாரானது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்தது. அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகளும், கெடுபிடிகளுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தவிர, ஈரானுக்குச் சொந்தமான கப்பலைப் பிடித்து வைத்திருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க முற்றுகை தொடரும் எனவும், அதேநேரத்தில், போர் நிறுத்தம் நீடிப்பதாகவும் பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்க ராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கான தனது முற்றுகையை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் விரிவாகக் கூறிய ட்ரம்ப், ’எதிர்பார்த்தபடியே, ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்பதாலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரை, அந்நாட்டின் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம். எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற எல்லா வகையிலும் தயாராகவும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். ஆகையால், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்பின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான், “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும், இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, ஒரு விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்குப் பாடுபடுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டாம் என ஈரான் முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முடிவு, ஒரு திடீர் தாக்குதலுக்காக கால அவகாசம் பெறுவதற்கான ஒரு தந்திரம்” என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃபின் ஆலோசகர் ஒருவர், ”ட்ரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பு என்பது, திடீர்த் தாக்குதல் நடத்துவதற்கு அவகாசம் பெறுவதற்கான ஒரு தந்திரம் என்பதில் சந்தேகமில்லை. ஈரான் முன்முயற்சி எடுக்க வேண்டும். ட்ரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பால் எந்த அர்த்தமும் இல்லை; தோற்கும் தரப்பு நிபந்தனைகளை விதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை (ceasefire) நீட்டிக்க முயற்சி நடந்தாலும், அதில் ஈரான் முழுமையாக நம்பிக்கை வைக்கவில்லை. குறிப்பாக ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது. இதன் காரணமாக, மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.