செய்தியாளர் - M.மீரா
பிரான்ஸில் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, பொதுச் சேவைகளின் தரம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்களின்போது கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது. பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்ட ஏற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கை சுமார் 8 லட்சம் எனக் கூறினர். பல்வேறு கட்டங்களில் 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொரு தகவலில் கைது எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தற்போது சர்வதேச அளவிலான வார்த்தைப் போராக மாறியுள்ளது. போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், இந்த வன்முறையைச் சுட்டிக்காட்டி ஈரான், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானைக் கடுமையாக விமர்சித்துள்ளது
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு மேக்ரான் ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அதே மோதலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து பிரான்ஸ் அதிபர் கவலை தெரிவிப்பது முரண்பாடானது என்று விமர்சித்துள்ளார்.
வார இறுதியில் பிரான்ஸில் ஏற்பட்ட கலவரத்துக்குப் பிறகு மேக்ரானின் காணொளியைப் பகிர்ந்த அராக்சி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மேக்ரான் அனுப்பிய செய்தியையும் சுட்டிக்காட்டினார். அதில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவும் பிரான்ஸும் இணைந்து பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மேக்ரான் தெரிவித்திருந்தார்.
ஈரான் மக்கள் மீது நடத்தப்பட்டதாகத் தான் கூறும் கொடுமைகளுக்கு மேக்ரான் ஆதரவு அளித்ததாக அராக்சி குற்றம்சாட்டினார். அதன் விளைவுகளில் இருந்து தற்போது மேக்ரான் விலகிக்கொள்ள நினைத்தாலும், அதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் போராட்டக்காரர்கள் அரசியல் மாற்றத்தையும், சுதந்திரமாகக் கூடிப் போராடும் உரிமையையும் கோருவதாகக் குறிப்பிட்ட அராக்சி, பிரான்ஸின் எதிர்காலம் குறித்து மக்கள் எழுப்பும் குரலை மேக்ரான் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.