அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அங்கு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், ”போர் தொடங்கிவிட்டது” என்று ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் போருக்கு அமெரிக்காவும் ஆதரவாக உள்ளது. இதனால் தெஹ்ரான் மக்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ”ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனியைக் கொன்றால் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “கமேனியைக் கொல்ல இப்போதைக்குத் திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு” என எச்சரித்திருந்தார்.
அவருடைய இந்தப் பதிவுக்கு கமேனி எதிர்வினையாற்றியுள்ளார். அவர், “பயங்கரவாதி சியோனிஸ்ட் ஆட்சிக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். சியோனிஸ்ட்டுக்கு கருணை காட்ட மாட்டோம். போர் தொடங்கிவிட்டது” எனவும் அடுத்தடுத்த பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல் மீது, இன்று காலை ஈரான் இரண்டு சுற்று ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால், அங்கு மேலும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாள்களாக நீடிக்கும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 போ் உயிரிழந்துள்ளனர். 1,800 போ் காயமடைந்துள்ளனர். அதேநேரத்தில், ஈரான் நடத்திய தாக்குதலில் 24 இஸ்ரேலியா்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுமாா் 600 போ் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.