ஜூன் 17 MoU மூலம் 60 நாள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட அமெரிக்கா-ஈரான் உறவில், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை குறித்து குழப்பம் நீடிக்கிறது. வாஷிங்டன் MoU கடமைகளை முழுமையாக நிறைவேற்றும்வரை இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கமாட்டோம் என ஈரான் சபாநாயகர் காலிபாப் எச்சரிக்கிறார். 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, கத்தார் வழி மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் - m. மீரா
அமெரிக்கா - ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, கத்தார் தலைநகரமான தோஹாவில் அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்காவும் ஈரானும் ஜூன் 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு, தங்கள் போர்நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டித்தன. இந்த இடைப்பட்ட காலத்தில், ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடர இருதரப்பும் ஒப்புக்கொண்டன. ஆனால், கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் வான்வழித் தாக்குதல்களும், ஏவுகணை வீச்சுகளும் தீவிரமடைந்துள்ளன. இதனால் 2ஆம்கட்ட பேச்சுவார்த்தைகள் நிகழுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
கத்தாரில் ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்தச் சூழலில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் உள்ள முக்கியக் கடமைகளை வாஷிங்டன் முழுமையாகச் செயல்படுத்தும்வரை, இறுதி உடன்படிக்கைக்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஈரான் தொடங்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும் என்று அமெரிக்கா வெளிப்படையாகவே விரும்புகிறது. பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றால், ஈரான் நிரந்தரமாக மாற்றமடையும் என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) உள்ள குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து ஈரானுடன் மின்னணு முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் நடப்பதை ஒப்புக்கொள்ள ஈரான் மறுப்பதை பாரசீகப் பேச்சுவார்த்தை உத்தி என்று வான்ஸ் வர்ணித்துள்ளார்.
அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது மற்றும் முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துக்களை விடுவிப்பது குறித்து விவாதிக்க, மத்தியஸ்த நாடான கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானியப் பேச்சுவார்த்தை குழுவினர் கத்தாரில் இருப்பார்கள என்று ஈரான் கூறியுள்ளது.
முடக்கப்பட்ட ஈரானிய நிதியில் 6 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என்பதை முதல்கட்ட நடவடிக்கையாக ஈரான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.