அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கு ஈரான் தயாராகி வருகிறது. நாளை, (ஜூலை 4) ஈரானின் தெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
அணு ஆயுதம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கியதில், ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அயதுல்லா அலி காமேனி, போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். அவரது மகன் மொஜ்தபாவைத் தவிர மேலும் அவருடைய உறவினர்கள் சிலர் இதில் கொல்லப்பட்டனர். இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும், தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நடைபெற்றதால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கு ஈரான் தயாராகி வருகிறது. நாளை, (ஜூலை 4) ஈரானின் தெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் ஜூலை 9ஆம் தேதி மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இந்த இறுதிச் சடங்கில், வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்ளிட்ட பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் அவரது இறந்த உறவினர்களின் உடல்களும் வைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், இது நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசு இறுதிச் சடங்காக அமைகிறது. அதேநேரத்தில், போர் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பொதுவெளியிலும் காணப்படாத மொஜ்தபா காமேனி, தனது உயிருக்குத் தொடரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஈரான் அதிகாரப்பூர்வமாக அவர் வரமாட்டார் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
மற்றொரு புறம், காமேனியின் மரணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு அவரது அடக்கம் நடத்தப்படுகிறது. இஸ்லாமிய கலாசாரத்தின்படி இது மிகவும் அசாதாரணமான தாமதமாகும். ஆனாலும் அவரது உடல் இத்தனை நாட்களும் மத விதிமுறைகளுக்குட்பட்டே வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஷியா சட்டத்தின்படி, ”விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் உடலைத் தாமதமாக அடக்கம் செய்யவும், குளிரில் பதப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. எனவே நான்கு மாதங்கள் உறைநிலையில் வைப்பது ஒன்றும் அசாதாரணமானதல்ல. மத மற்றும் சட்டத் தரநிலைகள் இதைத்தான் உள்ளடக்குகின்றன” என மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.