ஈரான்| அலி காமேனி இறுதிச்சடங்கு.. வெளியில் வருவாரா மொஜ்தபா? குறிவைக்கும் US, இஸ்ரேல்?
ஈரானில் அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுவெளியில் தோன்றாமல் தலைமறைவாக இருக்கும் அவரது மகன் இந்நிகழ்வில் கலந்துகொள்வாரா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கியதில் ஈரான் சிதையுண்டது. தவிர, அந்நாட்டின் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அயதுல்லா அலி காமேனி, போரின் முதல் நாளிலேயே உயிரிழந்தார். அவருடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதலில் அவரது மகன் மொஜ்தபா காமேனி மட்டும் கடுமையான காயங்களுடன் உயிர்பிழைத்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுநாள்வரை அவர் பொதுவெளியில் தோன்றாததால், அவரைப் பற்றிய தேடுதல் வேட்டையை அமெரிக்காவும் இஸ்ரேலும் துரிதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இஸ்லாமிய சட்டங்களின்படி, இறந்தவர்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றபோதிலும், வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்துவந்த நிலையில், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தவிர, இருதரப்பிலும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. எனினும், பேச்சுவார்த்தைக்கு இடையே மீண்டும் அப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கு ஈரான் தயாராகி வருகிறது. ஜூலை 4ஆம் தேதி ஈரானின் தெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் ஜூலை 9ஆம் தேதி மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதையடுத்து, அயதுல்லாவின் மகனும் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றுவாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு உச்ச தலைவர் பதவியை மொஜ்தபா ஏற்றதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் இதுவரை பொதுவெளியிலோ அல்லது காணொளியிலோ தோன்றவில்லை. மாறாக, அவர் கூறியதாகக் கூறப்படும் அனைத்து அறிக்கைகளும் அரசு தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகின்றன. ஆயினும், பொதுவெளியில் அவர் வராததால் இன்றுவரை அவரைப் பற்றிச் சந்தேகம் நீடித்து வருகிறது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தலைமறைவாக இருப்பதாக ஈரான் தெரிவிக்கிறது. மற்றவர்களோ, அவரது காயங்களையே முதன்மைக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில்தான் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற இருப்பதால், அது அவருக்கு ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக, இதுபோன்ற நிகழ்வுகள் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுக்கு, தங்கள் வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்து வந்துள்ளன. மொஜ்தபாவின் தந்தையான அலி காமேனியே, இதற்குமுன்பு தமது முன்னோடிகளின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றுள்ளார். ஆகையால், மொஜ்தபாவும் தன் தந்தைக்காகவும், நாட்டுக்காகவும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார் என ஈரான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், ஈரானிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த உறுதியான தகவலையும் அளிக்கவில்லை. ஆனால், உண்மையில் அவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதை அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து உலகமே எதிர்பார்க்கிறது.

