அல்லு அர்ஜுன் PTI
உலகம்

”பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு துணை நிற்பேன்” ஜாமீனில் வெளியே வந்தபின் அல்லு அர்ஜுன் உறுதி!

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு துணை நிற்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Prakash J

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா இரண்டாம் பாகம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதற்கிடையே, ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில், இந்த படத்தின் பிரீமியர் காட்சியைப் பார்க்கச் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். பின்னர் மீட்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அா்ஜுன் அறிவித்தாா்.

அல்லு அர்ஜூன்

மேலும், நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது காவல் துறையினா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மறுபுறம், இந்த விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரேவதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் நாம்பள்ளி நீதிமன்றம், நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தெலங்கானாவிலுள்ள சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, அல்லு அா்ஜுக்கு ஜாமீன் கோரி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது உயா்நீதிமன்றம். இருப்பினும், முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் சஞ்சல்குடா சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், நேற்று இரவு முழுவதும் அவர் சிறையிலேயே கழிக்க நேரிட்டது. இந்த நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை (டிச.14) 7 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அல்லு அர்ஜுன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், “நான் கைது செய்யப்பட்டதில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக எனது ரசிகர்களுக்கு நன்றி. நெரிசல் சம்பவமும், பெண்ணின் மரணம் முற்றிலும் தற்செயலானது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான், 20 வருடங்களாக சந்தியா திரையரங்குக்கு வருகிறேன். ஆனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவத்தையும் பார்த்ததில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். நடந்ததற்கு வருந்துகிறேன். நான் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன். அதனால் இந்த விஷயம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நான் அந்தப் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு துணை நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.a

முன்னதாக இந்த விவகாரம் குறித்துப் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக்குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால்... அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்விகூட கேட்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேநேரத்தில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பாஸ்கர், "இந்த வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். அவர், கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை" என அவர் தெரிவித்திருந்தார். மேலும், அல்லு அர்ஜுனு கைது செய்யப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.