செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல்வேறு பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பும் முக்கியப் பங்காற்றியதாக கூறப்பட்டது.
ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட S-400 அமைப்பின் செயல்பாடு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில், அதன் அடுத்தகட்ட தொழில்நுட்பமாகக் கருதப்படும் S-500 அமைப்பை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தற்போது முன்மொழிந்துள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில், பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா–ரஷ்யா உறவு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். உக்ரைன் போர் குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையே, இந்தியாவுக்கு புதிய பெரிய பாதுகாப்பு முன்மொழிவுகளை ரஷ்யா வைத்துள்ளது.
அதன்படி, S-500 வான் மற்றும் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு மற்றும் Su-57 ஐந்தாம் தலைமுறை stealth போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு கூடுதலாக 5 S-400 squadrons-ஐ வழங்கவும் ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இவை வெறும் 5 ஏவுகணை வாகனங்கள் அல்ல; ஒவ்வொன்றும் பல launchers, radar மற்றும் command system உள்ளிட்ட முழுமையான S-400 ராணுவப் பிரிவுகளாகும்.
இந்த 5 கூடுதல் S-400 squadrons-க்கான திட்டத்தின் மதிப்பு சுமார் ₹30,000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தற்போது உள்நாட்டிலேயே நவீன பாதுகாப்பு ஆயுதங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, நீண்டதூர வான் பாதுகாப்புக்கான Project Kusha மற்றும் ஐந்தாம் தலைமுறை stealth போர் விமானமான AMCA ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ரஷ்யாவின் புதிய ஆயுதங்களை உடனடியாக வாங்குவதா அல்லது உள்நாட்டுத் திட்டங்கள் தயாராகும் வரை காத்திருப்பதா என்ற கேள்வி இந்தியாவுக்கு உள்ளது. குறிப்பாக, AMCA தயாராகும் காலகட்டத்திற்கு இடையில் இந்திய விமானப்படையின் தேவையை சமாளிக்க, Su-57-ஐ ஓர் இடைக்காலத் தீர்வாகப் பரிசீலிக்கலாம் என்பதே ரஷ்யாவின் முன்மொழிவுகளில் ஒன்றாகும். எனவே, S-500, Su-57 மற்றும் கூடுதல் S-400 squadrons தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவுகளை இந்தியா எவ்வாறு பரிசீலிக்கப் போகிறது என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.